புதுடெல்லி: பிரதமருக்கு பரிசாக கிடைத்த 1,200 பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்க பலர் போட்டி போட்டனர். அக்டோபர் 2-ம் தேதி வரை இதை ஏலம் கேட்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைக்கும் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும். இதில் கிடைக்கும் தொகை நவாமி கங்கை திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். அதேபோல், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பரிசாக கிடைத்த 1,200 பொருட்கள் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு pmmementos.gov.in என்ற இணையதளத்தில் ஏலம் விடப்பட்டன.
மோடியின் என்சிசி முன்னாள் மாணவர் அடையாள அட்டை, அவருக்கு கிடைத்த அயோத்தி ராமர் கோயில் மாதிரிகள், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நினைவாக அவருக்கு அளிக்கப்பட்ட செஸ் தம்பி மாதிரி சிலை போன்றவற்றை அதிகம் பேர் ஆன்லைன் மூலம் ஏலம் கேட்டனர். இந்த பொருட்கள் எல்லாம் ‘அதிகம் ஏலம் கேட்கப்பட்டவை’ என்ற பிரிவில் இடம் பெற்றிருந்தன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத்தில் உள்ள என்சிசி இயக்குநரகம், ஒரு நினைவுப் பரிசை கடந்த 2021-ம் ஆண்டு வழங்கியது. அது மோடியின் போட்டோவுடன் கூடிய முன்னாள் மாணவர் அடையாள அட்டை. இதை நேற்று காலை 11 மணி வரை 20 பேர் ஏலம் கேட்டிருந்தனர்.
அயோத்தி கோயில் மாதிரிகள் பல, பிரதமருக்கு பரிசாக அளிக்கப்பட்டன. அதில் ஒன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசாக அளித்தது. இவற்றையும் பலர் ஏலம் கேட்டிருந்தனர். 6 கிலோ எடையில் இருந்த அயோத்தி கோயில் மாதிரியின் அடிப்படை விலை ரூ.10,800-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மெட்டல் சங்கு, விநாயகர் சிலைகள், திருப்பதி பாலாஜி மகராஜ் மர சிலை போன்ற பரிசு பொருட்களையும் பலர் ஏலம் கேட்டிருந்தனர். திருப்பதி பாலாஜி சிலையை ஆந்திர ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் பரிசாக அளித்திருந்தார்.
மெட்டல் சங்கு, செஸ் தம்பி சிலை ஆகியவற்றை நேற்று காலை 11 மணி வரை 30 பேர் ஏலம் கேட்டிருந்தனர். கடாயுதம், அலங்கார வாள், அசோக சின்னம், நடராஜர் சிலை, யானை சிலை, மர செஸ்போர்டு ஆகியவையும் ஏலத்தில் இடம் பெற்றிருந்தன.