திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா, தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் சுகந்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று தன்னுடைய உரையை ஆரம்பித்தார். இப்படி என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று கேட்கும் போது? பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இன்று சௌக்கியம் என்று கூறுவதற்கு காரணம் தந்தை பெரியார் தான். சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் அனைவருமே நமது எம்.பி.,க்கள் தான் – அது எந்த ஊராக இருந்தாலும் சரி சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் அனைவருமே நமது எம்.பி.,க்கள் தான். சேகுவாரா சொல்வார்: அநீதிதை பார்த்து கோபப்படுபவர்கள் யாவரும் என் நண்பர்கள் என்று கூறுவார் – புரட்சியாளர்கள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். பெரியார் படப்பிடிப்பின் பெரும்பாலான படப்பிடிப்புகள் திருச்சியில் தான் எடுத்தோம் எனவே நான் இதை பெருமையாக கருதுகிறேன். 1967 தேர்தலில் தி.மு.க ஆட்சி வருகிறது – இந்தியாவில் முதல்முறையாக ஒரு கட்சி தேசிய கட்சிகளுடன் போட்டி போட்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க தான்.
பதவி ஏற்று கொண்டு அண்ணா சட்டசபைக்கு சென்ற போது முன்னதாக சட்டசபைக்கு செல்லாமல் கார் திருச்சியை நோக்கி வந்தது – அப்போது எதற்காக திருச்சி நோக்கி செல்கிறோம் என்று கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் கேட்டபோது முதல் வாழ்த்தை நாம் பெரியாரிடம் இருந்துதான் பெற வேண்டும் என்று சொன்னார் – அத்தகைய சிறப்பு மிக்கவர் பெரியார். கல்வி மிக முக்கியம் – பணம் வேண்டும் என்றால் அதற்கு தேவை கல்வி, வேலைவாய்ப்பு. எனவே அனைவருக்கும் அவர்களது குடும்பத்தை இயக்க கல்வி அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமூகநீதி என்பது பிறப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பது கிடையாது என்பதே… சுயமரியாதையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் வளர்த்தவர் பெரியார். உங்களிடம் கூறுகிறேன் : Your faithfully, your sincerely என்பது எல்லாம் தேவை இல்லை, நேரடியாக சொல்லலாமே. பெரியாருடைய பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி – திருச்சியில் ஒருமுறை பெரியார் சைக்கிள் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது செருப்பு வீசிய சம்பவம் இங்குதான் நடந்தது.
நாங்கள் கும்பிடும் தெய்வத்தை நீ இல்லை என்று எப்படி கூறலாம் என்று செருப்பை ஒருவர் வீசினார் – அப்போது பெரியார் ரிக்ஷாவில் ஏறி நின்று மீண்டும் கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கினார் – பின்னர் இன்னொரு செருப்பையும் பெற்றுகொண்டு சிரித்து கொண்டு நமக்கு செருப்பு கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் சென்றார். உண்மையில் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்வது செருப்பு மாலை போடுவது போன்ற பலர் செய்கிறார்கள். ஆனால் பெரியார் உயிருடன் இருந்தால் நானே நேராக வந்து நிற்கிறேன் என் மீது போடுங்கள் என்று அவரே பெற்றுக் கொள்வார் – எதற்கும் பயந்தவர் தந்தை பெரியார் அல்ல. பெரியார் என்பவர் ஒரு சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம் அவர் ஒரு கோட்பாடு – எந்த ஒரு கஷ்ட நஷ்டங்களையும் பட்டவர் பெரியார் அல்ல. ஊரில் முக்கியஸ்தர் என்று சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர் – அப்படி இருக்கும் பட்சத்தில் இதை எல்லாம் தூக்கி வீசிவிட்டு சமூக நீதிக்காக வெளியே வந்தவர். ஈரோட்டில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாமர மக்களுக்காக குரல் கொடுத்தார் என்றால் அவர்தான் தந்தை பெரியார் திறமையால் நடிப்பால் படிப்பால் தாழ்ந்தவன் என்ற சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம் – ஆனால் பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்வதில் என்ன நியாயம் என்று பேசினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil