கடைக்கோடியில் உள்ள மாணவருக்கும் இன்று கற்றல் கணினி வாயிலாகச் சென்றடைகிறது. இந்தக் கணினி யுகத்தில் கதையோடு சேர்த்து கதாபாத்திரமாக தன்னை மாற்றி கல்வி கற்பித்து வருகிறார் தமிழாசிரியர் துரைப்பாண்டியன். தான் 12-ம் வகுப்பு படிக்கும்போதே ஆசிரியராக வேண்டும் என்ற நோக்கத்தோடு தாயாராகிக்கொண்டிருந்த துரைப்பாண்டியன், கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியரானார்.
தற்போது தூத்துக்குடி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து அரசு மாணவர்களுக்கு எளிய முறையில் பிடித்த வகையில் பாடம் கற்பித்து வருகிறார். குறிப்பாக, திருவள்ளுவர் வேடம் அணிந்து அவர் மாணவர்களுக்கு திருக்குறள் கற்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிக அளவில் பகிரப்பட்டது. இதுமட்டுமின்றி மன்னர் குசேலன் பாண்டியன் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்கள் வேடமணிந்து அவர்களது வாழ்க்கை வரலாற்றின் நடிப்பின் மூலமாக பாடமாக நடத்துகிறார். மேலும், அனைவரும் வியக்கும் வகையில் மாணவர்களைப் போலவே சீருடை அணிந்து வந்து அவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, உணவு உண்பது, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற பல செயல்கள் மூலம் மாணவர்களுடன் சக நண்பன் போல் பழகி வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “வித்தியாசம் தான் அழகு” என்று எழுத்தாளர் மாடசாமி அவர்கள் கூறியதை மேற்கோள் காட்டி பேசப் தொடங்கினார். “ ஆசிரியராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை . நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன் . ஆனால் சில ஆசிரியர்கள் பெயர் கூட எங்களுக்கு தெரியாது . அவர்களிடம் சகஜமாகப் பழக முடியாது. எனவே என் மாணவன் என்னிடம் இயல்பாகப் பழக வேண்டும் என எண்ணினேன். அதனால் அவர்களைப் போலவே சீருடையில் பள்ளிக்கு வர முடிவு செய்தேன். இதன் பயனாக அவர்களில் ஒருவனாக நினைத்து என்னிடம் மனம் திறந்து பேசுகின்றனர். மற்ற ஆசிரியர்கள் விமர்சனம் செய்தாலும் நான் பெரிதளவில் அதை கண்டுகொள்வதில்லை” என்றார்.
கற்றல், கற்பித்தல் எல்லாமே டிஜிட்டல் மயமாக ஆனபோதும் வேடமிட்டு நேரடியாக கற்பிக்க காரணம் என்ன எனக் கேட்டபோது, “மாணவர்களின் மனநிலையை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் என என்னால் உணர முடிந்தது. இந்த கொரோனா காலகட்டம் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குமுன் பள்ளியில் நடைபெறும் விழாக்களில் மாணவர்கள் கலந்துகொண்டு நாடகத்தின் கதாபாத்திரமாக அச்சமின்றி நடித்து வந்தார்கள். ஆனால் தற்போது அனைவரின் முன்பும் பேசக்கூடத் தயங்குகிறார்கள். சக மாணவர்கள் மத்தியில் நடிக்கவோ, வேடமிட்டு பேசவோ கூச்சம் காட்டுகிறார்கள். இந்த அச்சத்தை உடைப்பதற்காக நானே வேடமிட்டு காட்டினேன். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஆசிரியரே செய்கிறார் நாமும் செய்யலாம் என்ற ஆர்வம் மாணவர்களுக்கு வந்தது . எனவே அதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறேன். இதனால் பாடமும் புரியும் அந்த கதாபாத்திரமும் நீண்ட காலம் நினைவில் நிற்கும்” எனக்கூறினார்.
மேலும், “மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராக இருப்பதால் சில எதிர்மறை விமர்சனங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. நான் என் மாணவர்களுக்காகச் செய்கிறேன் என்பதால் அந்த விமர்சனங்களை பொருட்படுத்தாமல் கடந்து விடுகிறேன். என் மாணவர்களின் பெற்றோர் பார்வையில் நம் பிள்ளைகளை சரியான நபரிடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற எண்ணமும் என் மீதான மரியாதையும் ஏற்பட்டிருக்கிறது” என்றார் மகிழ்ச்சியாக.
பாடத்தை வித்தியாசமான முறையில் நடத்துவதோடு மட்டுமின்றி மாணவர்களுடையத் தனித் திறன்களையும் ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியர் துரைப்பாண்டியன், சுவர் ஓவியம் வரைய வைத்தல், மாண்புமிகு மாணவன் திட்டத்தின் மூலம் மாதம் ஒரு முறை சிறந்த மாணவ மாணவிக்கு பரிசு வழங்குதல், மாணவர்களின் ஓவியங்களை இதழ்களில் வெளியிடுதல் போன்ற பல்வேறு செயல்களையும் செய்து வருகிறார். இதனால் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாகத் தற்போது கிராமியக் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக இன்றைய மாணவர்களுக்கு என்னவென்றே தெரியாத கடிதம் எழுதும் முறையை சொல்லிக் கொடுத்து எழுத்தாளர்களுக்கு மாணவர்களை நேரடியாக கடிதம் எழுதி அனுப்ப வழிசெய்திருக்கிறார்.
அதன் ஒரு விளைவாக எழுத்தாளர் தர்மன் அவர்களுக்கு மாணவர்கள் எழுதிய கடிதம் சென்றுள்ளது. அவர் மகிழ்ச்சி அடைந்து மாணவர்களை பள்ளிக்கு வந்து நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறிச் சென்றுள்ளார். இன்னும் பிற எழுத்தாளர்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்கள் இவரின் மாணவர்கள். இவருடைய இந்தப் பணியை சக ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இவரின் இந்த சிறப்பான பணிகளுக்கு அவருடைய மனைவியும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இறுதியாக ஆசிரியர் துரைப்பாண்டியன் கூறுகையில், `என்னைப் போன்று மற்ற ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல், அவர்களைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்று கூறி முடித்தார்.
ஆசிரியரின் பணி சிறக்க வாழ்த்துவோம்!