கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தடுப்பூசிகள் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தன. தமிழகத்தில் 96 சதவிகிதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவிகிதத்தினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 80,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மெகா தடுப்பூசி முகாம், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவியாக அமைந்தது. தமிழகத்தில் இதுவரை 37 முறை இந்தத் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. 38-வது தடவையாக வரும் செப்டம்பர் 30-ம் தேதி நடக்கும் முகாமுடன் இந்த மெகா தடுப்பூசி முகாம் நிறைவுக்கு வரும் என தெரிகிறது. இந்த நிலையில், தடுப்பூசி போடும் முறையில் தமிழக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் முதல், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற 10,000-க்கும் அதிகமான சுகாதார மையங்களில் வாரம்தோறும் புதன்கிழமையில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த வாராந்தர முகாமில், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், இளைஞர்கள், பாலூட்டும் தாய்மார்கள் என பல பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கேற்ப 11 வகையான தடுப்பூசிகள் போடப்படும்.
இதேபோல வாரம்தோறும் வியாழக்கிழமை தோறும், பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதன்மூலம், அடிப்படையான தடுப்பூசிகள் அனைத்தும் ஒரே இடத்தில் செலுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு அலைச்சல் குறைவதுடன், நேர விரயமும் தவிர்க்கப்படும்.
இந்தத் தகவலை நேற்று உறுதிபடுத்தியிருக்கும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் 5.38 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
அக்டோபர் மாதம் முதல், புதன்கிழமை தோறும் போடப்படவிருக்கும் தடுப்பூசிகளின் விவரங்களையும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
11 வகையான தடுப்பூசிகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் பயனாளர்களின் விவரங்கள்…
BCG, OPV, Hep B – குழந்தை பிறந்தவுடன்
OPV 1, RVV 1, fIPV 1, PCV 1, Penta 1 – 6 வாரங்கள் முடிந்தவுடன்
OPV 2, RVV 2, Penta 2 – 10 வாரங்கள் முடிந்தவுடன்
OPV 3, RVV 3, fIPV 2, PCV 2, Penta 3 – 14 வாரங்கள் முடிந்தவுடன்
MR 1, PCV Booster, JE or JEEV 1 – 9 முதல் 12 மாதங்களுக்குள்
OPV Booster, MR 2 , JE or JEEV 2, DPT 1st Booster – 16 முதல் 24 மாதங்களுக்குள்
DPT 2nd Booster – 5 – 6 வயதுக்குள்
Td 10 – 10 வயது முடிந்தவுடன்
Td 16 – 16 வயது முடிந்தவுடன்
Td 1 & Td 2 & Td Booster – தாய்மார்களுக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன்.