முழுமைத் திட்டமும் சென்னை பெருநகரும்: உங்களின் கருத்துகளை தெரிவிப்பது எப்படி?

சென்னை: சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டத்தை (2027 – 2046) தயார் செய்யும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து தரப்பு மக்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளது.

முழுமைத் திட்டம் என்றால் என்ன? – ஒரு பெருநகரம் அடுத்த 20 ஆண்டுகளில் அடையும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நகரத்தின் உட்கட்டமைப்பு வசதி முதல் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்த தயார் செய்யப்படும் திட்டம்தான் முழுமைத் திட்டம் (Master Plan) ஆகும். இந்த முழுமைத் திட்டத்தின் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதை தயார் செய்வதுதான் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பணியாகும்.

இரண்டு கட்ட முழுமைத் திட்டம்: இதுவரை சென்னைக்கு 2 முழுமைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டம் 1976-ம் ஆண்டும், 2-வது முழுமைத் திட்டம் 2006 முதல் 2026 வரையும் அமலில் இருக்கும். இந்த 2-வது முழுமைத் திட்டத்தில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

3-வது முழுமைத் திட்டம்: 3-வது முழுமைத் திட்டம் (2027 – 2046) தயார் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி, போக்குவரத்து மேம்பாடு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, கால நிலை மாற்றம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

அனைவருக்கும்: பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழுந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மீனவர்கள், வீடற்றவர்கள், திருநங்கைகள், மாணவர்கள், சாலையோர வியாபாரிகள் அனைவரின் கருத்துகளை பெற்று இந்தத் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

கருத்துக் கேட்பு: பொதுமக்கள் https://cmavision.in என்ற இணையதளத்தில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். பொதுமக்கள் கருத்துகள் மற்றும் சட்டமன்ற தொகுதி வாரியாக பயிலரங்கு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.