கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.46 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த ஜூலை 23-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அமலாக்கத் துறையால் இரு வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி பணமும், ரூ. 5.08 கோடி மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டன.
தற்போது பார்த்தா சாட்டர்ஜி சிபிஐ விசாரணையில் உள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக வரும் 21-ம் தேதி வரை அவரிடம் சிபிஐ விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான 40 அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், கொல்கத்தாவின் பிரதான இடத்தில் உள்ள நிலம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதோடு, 35 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.7.89 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 46.22 கோடி என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பணம், நகை, சொத்துக்கள் என இதுவரை ரூ.103.10 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.