கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாய் பரபர புகாரை முன்வைத்து உள்ளார்.
இந்தியாவில் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மைனர் குழந்தைகளைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே இருக்கிறது.
இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தில் பிளஸ் 1 மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயாரே புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சனிக்கிழமை இரவு கண்காட்சியில் இருந்து வீடு திரும்பியபோது நான்கு இளைஞர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டு உள்ளது.
தாயார்
இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், “சனிக்கிழமை இரவு விஸ்வகர்மா பூஜையையொட்டி கின்னஹார் கிராமத்தில் கண்காட்சி நடைபெற்று இருந்தது. அதில் கலந்து கொள்ள எனது மகள் நண்பருடன் சென்று இருந்தார். இரவு நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை என்பதால் கால் செய்தோம். அதையும் அவர் எடுக்கவில்லை. அதன் பின்னர் இரவு முழுக்க அவரை தேடி அலைந்தோம்.
கூட்டுப் பலாத்காரம்
ஆனால், அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தான் காலையில் எனது மகள் வீடு திரும்பினார்.. இரவு முழுவதும் எங்கே இருந்தாய் என்று கேட்டதும், எனது மகள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். கிர்னாஹர் கிராமத்திலிருந்து வீடு திரும்பிய போது, நான்கு இளைஞர்கள் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று மயக்கமடையச் செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
தற்கொலை முயற்சி
இதையெல்லாம் அவள் அழுது கொண்டே கூறினாள். அதன் பின் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். எனது மகள் வீடு திரும்பிய போது, அவர் அணிந்து இருந்த உடைகள் கிழிந்து இருந்தது. எனது மகளுக்கு உடலில் சில இடங்களில் காயமும் ஏற்பட்டு இருந்தது. இது தொடர்பாகப் போலீசில் புகார் அளித்து உள்ளோம். அவர்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
போலீஸ் மறுப்பு
சிறுமியின் பெற்றோர் இப்படியொரு புகாரை அளித்து இருந்தாலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரின் விளக்கம் அதற்கு நேர்மாறாக உள்ளது. இது குறித்து பிர்பூம் மாவட்ட எஸ்பி நாகேந்திர நாத் திரிபாதி, “சிறுமி கூட்டுப் பலாத்காரத்திற்கு எல்லாம் உட்படுத்தப்படவில்லை. இன்று காலை சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
உண்மையில் நடந்தது என்ன
மருத்துவமனை சென்ற போது தனது மகளைச் சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்து இருக்கலாம் எனச் சிறுமியின் தாய் கூறினார். இருப்பினும், எங்கள் விசாரணையில், சிறுமி கின்னஹரில் உள்ள கண்காட்சிக்கே செல்லவில்லை என்பது தெரிய வந்தது அதற்குப் பதிலாக அவர் தனது நண்பருடன் பரு என்ற பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு தான் அவர்கள் இருவரும் இரவை கழித்து உள்ளனர்.
விளக்கம்
காலையில் அந்த பெண் வீடு திரும்பிய நிலையில், பெற்றோருடன் எங்கே சென்றாய் எனக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென சண்டை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த சிறுமியின் ஃபோன் காலை டிரேஸ் செய்யும் போது உறவினர் வீட்டிற்குச் சென்றது தான் உறுதியானது. எனவே, சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறிய புகார் உண்மை இல்லை. இந்த விவகாரத்தில் அவர்கள் புகாரும் அளிக்கவில்லை” என்றார்.