கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மொத்தம் உள்ள 12 இடங்களில் 11இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி.
வரும் 2024- மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் மம்தா பானர்ஜி, இதற்காக தேசிய அளவில் ஒரு எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
எலியும் பூனையுமாக
வரும் மக்களவை தேர்தலில் நிதீஷ் குமார், ஹேமந்த் சோரனுடன் கை கோர்த்து செயல்படுவேன் என்று கடந்த வாரம் கூட மம்தா பானர்ஜி கூறியிருந்தார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் நிதீஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு இருந்த நேரத்தில் மம்தா பானர்ஜியின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்ப்படுகிறது. இதனால், மேற்கு வங்காள அரசியலிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜகவும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றன.
12 இடங்களில் 11 இல் பாஜக வெற்றி
ஒருவொருக்கொருவர் கடுமையாக விமர்சனங்கள முன்வைப்பது என அம்மாநில அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், நந்திகிராம் தொகுதியில் உள்ள Bhekutia Samabay Krishi Samity- கூட்டுறவு அமைப்புக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 12 இடங்களில் 11 இடங்களில் பாஜக வென்றுள்ளது. முன்னதாக நேற்று தேர்தல் நடைபெற்ற போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதனால், மிகவும் பரபரப்புடன் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் பாஜக வெற்றிக்கனியை பறித்துள்ளது.
பரபரப்பாக நடந்த தேர்தல்
வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட இடையூறுகளுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டிய பாஜக, வெளிநபர்களை கொண்டு வந்து வாக்குப்பதிவை சீர்குலைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியது. இதனால், மிகவும் பரபரப்பாக இந்த கூட்டுறவு அமைப்பு தேர்தல் நடைபெற்றது. ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் கோட்டையாக விளங்கிய நந்திகிராம் தொகுதியில் பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மம்தா செல்வாக்கு சரிந்தது
கடந்த மாதம் நந்திகிராம்-2 பிளாக்கில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் 51 இடங்களில் வென்ற நிலையில் சிபிஎம் மற்றும் பாஜக ஒரு இடங்களில் வெற்றி பெறவில்லை. நந்திகிராம் கூட்டுறவு அமைப்பில் பின்னடைவு ஏற்பட்டதால், மம்தா பானர்ஜிக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக பாஜக தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாஜகவுக்கு பதில்
ஆனாலும் கடந்த மாதம் நந்திகிராமின் ஹனுபுனியா கோலபுகுர் மற்றும் பிருலியா ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டுறவு தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்றதாக கூறி அக்கட்சியினர் பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.