பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மைசூரு தசரா திருவிழா 413-வது ஆண்டாக வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார்.
இதைத் தொடர்ந்து 10 நாட்களும் மலர் கண்காட்சி, திரைப்பட திருவிழா, உணவு திருவிழா, இளைஞர் திருவிழா, மகளிர் திருவிழா என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவின் இறுதி நாளான அக்டோபர் 5-ம் தேதி மாலையில் சாமுண்டீஸ்வரி அம்மனின் 750 கிலோ எடையிலான தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து ஊர்வலமாக செல்லும். இதைத் தொடர்ந்து குதிரைப் படை, யானைப் படை, இசைக் குழுவினர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைநிகழ்ச்சி குழுவினர் என ஊர்வலம் நடைபெறும்.
நிறைவு நாளில் இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.