கொல்கத்தா: மேற்கு வங்கம், ஜார்கண்ட் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதனை “பாஜகவின் பழிவாங்கும் அரசியல்” என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “சோதனைகளை மோடி செய்யவில்லை என நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.
சட்டசபையில் கூட்டத்தொடரில் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு எதிரான தீர்மானத்தின்போது பேசிய மம்தா, “சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் மீதான பயத்தால் தொழிலதிபர்கள் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள். ஆனால், மோடி இதனை செய்யவில்லை என்று நான் நம்புகிறேன்.
சிபிஐ இனி பிரதமர் அலுவலகத்துக்கு தகவல்களை தெரிவிக்காது என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. மேலும், உள்துறை அமைச்சகத்திடமே தகவலை அது தெரிவிக்கிறது. சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி நிஜாம் அரண்மனைக்குச் செல்கிறார்கள். கட்சியையும் ஆட்சியையும் ஒன்றாக கலக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு நான் அறிவுறுத்துகிறேன்” என்று பேசினார்.