புதுடெல்லி: நாடு முழுவதும் 20 இடங்களில் யானைகள் மீது ரயில்கள் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டு உள்ளன.நாட்டின் பல பகுதிகளில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஜூலை மாதம், ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு 45 யானைகள் பலியாகி உள்ளன. ஒடிசாவில் 12 யானைகளும், மேற்கு வங்கத்தில் 11 யானைகளும் பலியாகி உள்ளன,’ என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், 1,800 கிமீ துாரம் உள்ள ரயில் பாதையில் யானைகள் மீது ரயில்கள் மோதுவதற்கான அபாயம் அதிகம் உள்ள 15- 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட இடங்களில் யானைகள் தண்டவாளங்களை கடப்பதற்கு வசதியாக, மண் பாதைகள் அமைப்பது, வளைவான பகுதிகளில் தண்டவாளங்களின் அருகில் உள்ள மரங்கள், செடிகளை அகற்றுவது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ரயில்வேக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரி தெரிவித்தார்.