ராகிங்கிற்கு எதிராக யுஜிசி எடுத்த அதிரடி முடிவு!

கல்லூரி செல்ல வேண்டும் மாணவர்களுக்கு எவ்வளவு ஆசை இருக்கிறதோ அதேயளவு பயமும் இருக்கிறது, அதற்கான காரணம் கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் தான்.  பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு படிக்கிறார்கள் என்று ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் ராகிங்கால் தங்களது பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்று மறுபுறம் பயப்படவும் செய்கிறார்கள்.  கல்லூரிகள் மட்டுமல்ல சில சமயம் பள்ளிகளிலும் ராகிங் நடைபெறுகிறது, ராகிங்கால் மனமுடைந்து சில மாணவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.  பொழுதுபோக்காக தெரியும் ராகிங்கிற்கு பின்னால் உயிரை குடிக்கும் அரக்கன் இருப்பது ராகிங் செய்யும் மாணவர்களுக்கு தெரிவதில்லை.  

பல கல்லூரிகளில் ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாலும் சில இடங்களில்நிர்வாகத்திற்கு தெரியாமல் ஒருசில மாணவர்கள் ராகிங் செய்து சக மாணவர்களை துன்புறுத்தி வருகின்றனர் என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது.  ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது, கல்வி நிறுவனங்கள் அடிக்கடி ராகிங் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தியும் வருகிறது.  இந்நிலையில் ராகிங் என்பதை முற்றிலும் ஒழித்து மாணவர்களின் வாழ்வை வளமாக மாற்றுவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) ஒரு முடிவெடுத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  

அதன்படி ‘ராகிங்கில் ஈடுபட மாட்டேன்’ என அனைத்து மாணவர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.  பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளபடி அந்த இணையதளத்தில் பதிவு செய்வதை மாணவர்களும், பெற்றோர்களும் உறுதி செய்ய வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கும் யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

மேலும் ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், பேருந்துகள், விடுதிகளில், மாணவர்கள் சாப்பிடும் இடங்களில் மற்றும் கழிப்பறைகள் என கல்லூரி வளாகத்தை சுற்றிலும் மாணவர்கள் நடமாடும் இடங்கள் அனைத்திலும்  சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் பொறுத்த வேண்டும் என்றும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது.  மேலும் அனைத்து கல்வி நிறுவங்களிலும் ராகிங் விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.