பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒருவர் கோயில் கட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. அதிலும் அந்த கோயிலினுள், ராமர் போன்ற வடிவத்திலேயே, வில் மற்றும் அம்புடன் யோகியின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. மேலும், இந்த சிலை ராஜஸ்தானிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டதாகும்.
இந்தக் கோயில், அயோத்தியா மாவட்டம், பாரத்குண்ட் அருகேயுள்ள பூர்வா கிராமத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இடம், ராமர் வனவாசம் செல்வதற்கு முன்பு, ராமரின் சகோதரரான பரதன் அவருக்குப் பிரியாவிடையளித்த இடமாக நம்பப்படுவதாகக் கூறப்படுகிறது. கோயிலில் காலை, மாலை என இருவேளைகளிலும் யோகியின் சிலைக்கு முன் சிறப்பு பூஜைகளும், பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமும் அளிக்கப்படுகிறது.
அதோடு, யோகியின் சிலைக்கு முன்பாக ராமருக்குப் பாடுவதைப் போல தினமும் துதிப்பாடல்களும் பாடப்படுகின்றன. இந்தக் கோயிலைக்கட்டியவர், அதே மாவட்டத்தில் வசிக்கும் பிரபாகர் மௌரியா என்பவராவார். இவர் 2015-ம் ஆண்டிலேயே, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டும் நபரை வழிபடுவதாக உறுதிமொழி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.