இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிவிட்டார் கிராமத்து நாயகன் ராமராஜன். `சாமானியன்’ என்ற படத்தின் மூலம் கம்பேக் ஆகிறார். `தம்பிக்கோட்டை’, `மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.ராகேஷ், `சாமானியன்’ படத்தை இயக்குகிறார். இன்று மாலை சென்னையில் இதன் டீசர் வெளியீடு நடக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் ராகேஷிடம் பேசினேன்.
“இந்தப் படத்தின் கதைதான் ராமராஜன் சாரை ஷூட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கு. கிராமத்துல இருந்து நகரத்துக்கு வரும் ஒருத்தர் பண்ற விஷயம்தான் படத்தின் கரு. அந்தக் கிராமத்து ஆள் எல்லோருக்கும் பிடிச்சவரான ஆளாக இருக்கணும். ‘ஐயோ… அவரா அவர் நல்லவராச்சே!’ன்னு ஒரு ஃபீல் வரக்கூடிய ஆளாக இருக்கணும். அப்படி ஒரு கேரக்டருக்கு யார் சரியா இருப்பாங்கனு நினைக்கறப்ப, ராமராஜன் சார்தான் நினைவுக்கு வந்தார்.
அவரை சந்திச்சு கதையைச் சொன்னேன். பொறுமையா கேட்டார். ‘ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி சின்னதா ரெண்டு கரெக்ஷன்களைச் சொன்னார். அதுல ஒரு கரெக்ஷனுக்கு என்னை கன்வின்ஸ் பண்ணினார். எனக்கும் அது சரியாகப்பட்டது. இன்னொரு கரெக்ஷன் வேண்டாம்ன்னு நான் அவரை கன்வின்ஸ் பண்ணிட்டேன்.
ராமராஜன் சாரோட, ராதாரவி சார், எம்.எஸ்.பாஸ்கர் சார்ன்னு பலர் நடிக்கிறாங்க. இன்னைக்கு டீசர் ஃபங்ஷன் இருக்கு… சமீபத்திலதான் படப்பிடிப்பு துவங்கினோம். சென்னையைத் தொடர்ந்து பெங்களூரு, தஞ்சாவூர் பகுதியிலும் படப்பிடிப்பு இருக்கு” என்றவரிடம்…
“அதுசரி, இவ்வளவு நாளாக ராமராஜன் படங்கள் பண்ணாமல் இருந்தது ஏன்னு கேட்டீங்களா?”
“கேட்காம இருப்பேனா… கேட்டேன். அவரும் புன்னகையோடு பதில் சொன்னார். இவ்வளவு நாளா அவரைத் தேடி நிறைய படங்கள் வந்தததாம். அப்பாவாக, வில்லனாகன்னு நிறைய சப்போர்ட்டிங் கேரக்டர்கள்தான் அவரைத் தேடி வந்தன. ‘நான் லீட் ரோலை எதிர்பார்த்தேன். லீட் ரோல் வரும்போது நடிச்சுக்கலாம்ன்னு பொறுமையா இருந்தேன். நான் எதிர்பார்க்கற மாதிரி ஒரு அருமையான கதையோடு நீங்க வந்தீங்க… சம்மதிச்சிட்டேன்’ன்னு எங்கிட்ட சொன்னார்.”