வாழப்பாடி அருகே கோர விபத்து சென்னை பஸ் மீது லாரி மோதி தம்பதி உள்பட 6 பேர் பலி: பஸ்சில் சீர்வரிசை லக்கேஜ்களை ஏற்றிய போது சோகம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே நள்ளிரவில், ஆம்னி பஸ் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் தம்பதியின் பேத்தி மஞ்சள் நீராட்டு விழாவிற்கான சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தனியார் ஆம்னி பஸ் 40 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு சென்னை புறப்பட்டது. பஸ்சை ஆத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் பரமேஸ்வரன் (50) ஓட்டிச் சென்றார். கிளீனராக பனமரத்துப்பட்டி அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த தீபன் (24) சென்றார்.

நள்ளிரவு 12.10 மணியளவில் வாழப்பாடியை கடந்து, பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே நின்றிருந்த 7 பயணிகளை ஏற்றுவதற்காக, பஸ்சை டிரைவர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தினார். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை பஸ்சின் பின்புறத்தில் உள்ள லக்கேஜ் அறையில் ஏற்றினர். இதற்கு கிளீனர் தீபன் உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து எம்.சாண்ட் லோடுடன் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பஸ்சில் உரசியபடி லக்கேஜ் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், கிளீனர் உட்பட 8 பேரும் தூக்கி வீசப்பட்டனர். லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர்கள், சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அடுத்த சில நொடிகளில், பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறியடித்து இறங்கி பார்த்தனர். அங்கு உடல் நசுங்கி கிளீனர் தீபன் உள்பட 5 பேர் சடலமாக கிடந்தனர். மேலும், 3 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த டெய்லர் திருநாவுகரசு (61), அவரது மகன் ரவிக்குமார் (41), உறவினர்களான ஆத்தூர் ஆறகளூரை சேர்ந்த செந்தில்வேலன் (46), ஆத்தூர் கொத்தாம்பாடியை சேர்ந்த சுப்பிரமணி (38), கிளீனர் தீபன் எனத் தெரியவந்தது.

படுகாயமடைந்த திருநாவுக்கரசின் மனைவி விஜயா (55), உறவினர்களான ஆத்தூர் துலுக்கனூர் ஏரிக்கரையை சேர்ந்த மாதேஸ்வரி (60), அவரது மகன் ஜெயப்பிரகாஷ் (40) எனத்தெரிந்தது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்ட விஜயா வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் இறந்த திருநாவுக்கரசின் மகள், குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.

அவரது மகளான, திருநாவுக்கரசின் பேத்திக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடத்த முடிவு செய்து, அதில் கலந்துகொள்ள திருநாவுக்கரசு, மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் சீர்வரிசை பொருட்களை வாங்கிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ்சில் செல்ல இருந்தனர். பேத்திக்கான சீர்வரிசை பொருட்களை பஸ்சின் லக்கேஜ் அறையில் ஏற்றும்போதுதான் டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்னி பஸ்சை சர்வீஸ் சாலையில் நிறுத்தாமல், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றியதோடு, லக்கேஜ்களை நடுரோட்டில் நின்றபடி ஏற்ற வைத்ததால் தான், பின்னால் வேகமாக வந்த லாரி மோதி, 6 பேர் பலியாகியுள்ளனர். லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பச்சுடையாப்பட்டிபுதூரைச் சேர்ந்த கார்த்திக் (30), ஆம்னி பஸ் டிரைவர் பரமேஸ்வரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கலெக்டர் கார்மேகம், எஸ்பி  அபிநவ் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.