கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி இண்டெர்னேசனல் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது.
இதனால் பள்ளி அமைந்துள்ள கனியாமூர் பகுதியே கலவரமயமானது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 28 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஜாமீன் வழங்கி உத்தவிட்டார்.
இந்த நிலையில் மாணவி மரணத்தை தொடர்ந்து கனியாமூர் சக்தி பள்ளியில் வெடித்த கலவரம் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்திட அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்தில் நியமனம் செய்யப்படும் அலுவலர் மற்றும் காவல்துறை கண்காணிப்பில் கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்திட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்த மர்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.