பழநி: வார விடுமுறை காரணமாக பழநி மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ஞாயிறு வார விடுமுறை தினம் காரணமாக நேற்று பக்தர்கள் வருகை அதிகளவு இருந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் அடிவார பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலையேறினர்.
அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு சுமார் 3 மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மலைக்கோயில் அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். மலைக்கோயில் மற்றும் அடிவார பகுதிகளில் பக்தர்கள் வெயிலில் வாடுவதைத் தவிர்க்கும் வகையில் பெரும்பாலான இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுபோன்று ராமேஸ் வரம் ராமநாத சுவாமி கோயிலிலும் விடுமுறையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.