இந்தியாவின் பிரபலமான மல்யுத்த குடும்பமான மகாவீர் போகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர் வினேஷ் போகத். இவர் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான கீதா மற்றும் பபிதாவின் சித்தப்பாவின் மகள். இதனாலேயே வினேஷ் போகத் மீது எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 முறை காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சமீபத்தில் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இதன் முதல் சுற்றில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் மங்கோலியாவின் குலான் பத்குயாக்கை எதிர்கொண்டார். இதில் வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். வினேஷ் போகத் இந்தத் தொடரில் பதக்கம் வெல்வார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் தொடக்க நிலையிலேயே அவர் தோல்வியைச் சந்தித்ததைப் பலரும் விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்தனர்.
இதையடுத்து, ரெபிசேஜ் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத், முதலில் கஜகஸ்தானின் எசிமோவாவை (Zhuldyz Eshimova) விக்டரி பை பால் (4-0) முடிவில் தோற்கடித்தார். பின்னர், அவரது எதிர் ஆட்டக்காரரான அஜர்பைஜானின் லேலா குர்பானோவா (Leyla Gurbanova) காயம் காரணமாகப் போட்டிக்கு வராததால் அந்தப் போட்டியில் வென்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து இறுதியாக, ஸ்வீடனின் எம்மா ஜோனா மால்ம்கிரெனைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இந்த வெற்றி அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் சுக்கு நூறாக்கியது.
வினேஷ்க்கு இது ஒன்றும் புதிதல்ல. 2016 ரியோ ஒலிம்பிக்கில் சீனாவைச் சேர்ந்த சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வினேஷின் முட்டியில் பயங்கரமான எலும்பு முறிவு ஏற்பட்டு மல்யுத்தக் களத்திலேயே சரிந்து விழுந்தார். அப்போது வினேஷின் மல்யுத்த வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலர் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் அதிலிருந்து மீண்டெழுந்த அவர், பல சாதனைகளையும் பதக்கங்களையும் வென்று இன்று வரை இந்தியாவின் முக்கிய வீராங்கனையாக நாட்டிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வினேஷ் போகத்.
அதில், “விளையாட்டு வீரர்களும் மனிதர்கள்தான். ஒவ்வொரு முறை போட்டி அறிவிக்கப்படும்போதும் நாங்கள் ஒரு ரோபோட்டைப் போல இயங்க முடியாது. வீட்டில் அமர்ந்தபடி விளையாட்டில் கைதேர்ந்தவர்களைப் போல விளையாட்டு வீரர்களை விமர்சிக்கும் கலாசாரம் இந்தியாவில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் துறையில் பல போராட்டங்களையும் தோல்விகளையும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் அவர்களை யாரும் இந்த அளவிற்கு விமர்சனம் செய்வதில்லை.
விளையாட்டு வீரர்களின் கடினமான காலங்களில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்குப் பதிலாக அவர்கள்மீது விமர்சனங்களை மட்டுமே வைக்கிறீர்கள். விளையாட்டு வீரர்கள், எப்போதும் தோல்வியடைய வேண்டும், தங்கள் கரியரை முடித்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்கள் பெறும் வெற்றிகள் அனைத்தும் எளிதானது அல்ல. அதில் பெரும் முயற்சியும், கடின உழைப்பும் இருக்கின்றன. அவர்கள் தோல்வியடைந்தால் முயற்சி செய்யவில்லை, பயிற்சி சரியாக இல்லை என்று அர்த்தம் இல்லை. விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறவேண்டும் என்று கடினமாக முயற்சி செய்கிறார்கள்.
வெற்றியும் தோல்வியும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் பயணத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு முறையும் நாங்கள் பதக்கம் பெறவில்லை என்று விளையாட்டில் கைதேர்ந்தவர்களைப் போல் விமர்சிக்கும் ரசிகர்களுக்கு இதில் என்னென்ன முயற்சிகள் இருக்கின்றன, இதற்காக எப்படித் தயாரானோம் என்பது தெரியாது. போட்டிக்காக நாங்கள் எப்படிப்பட்ட கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது.
விளையாட்டிலோ அல்லது எந்தவொரு விஷயத்திலோ கருத்து தெரிவிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று. ஒரு நாள் வீட்டிலிருந்தபடி விமர்சனம் செய்பவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால் விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அப்படியில்லை. அது அவர்களின் மனநிலை மற்றும் உழைப்பில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.
சமுக வலைதளங்கள் தற்போது அனைவரையும் இணைக்கும் பாலமாக இருக்கின்றது. எனவே அதைத் தவறாக, எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்த வேண்டாம். விளையாட்டு வீரர்களாகிய நாங்கள் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டு சீக்கிரம் விட்டுக்கொடுத்தாலோ அல்லது மிக விரைவில் தைரியத்தை இழந்துவிட்டாலோ அது ஆபத்தாக அமைந்து விடும். பின்னர், நாம் அடையவேண்டிய இலக்கை அடையமுடியாமல் போய்விடும். எனவே இதுபோன்ற கடினமான பயணத்தை மீண்டும் மீண்டும் கடந்து, யாருக்கும் பயப்படாமல் தங்கள் கனவை நோக்கி எனது சக விளையாட்டு வீரர்கள் பயணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என் அன்பான விளையாட்டு வீரர்களே, நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் நின்றிருக்கிறோம், ஒரே மாதிரியான பயணங்களைக் கொண்டிருக்கிறோம். நம்முடைய முயற்சிகள், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டு இந்த எதிர்மறையாக விமர்சனம் செய்யும் கலாச்சாரத்தை மாற்ற முயற்சி செய்வோம்” என்று தனது பதிவில் கூறியுள்ளார்.