வீரவநல்லூர் : வீரவநல்லூரில் அட்டகாசம் செய்யும் ஒற்றை குரங்கு, சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளை விரட்டி வருவதால் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் சாலையில் திரியும் நாய்களை கடித்து குதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரவநல்லூர் பஜார் மற்றும் பசும்பொன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக மூர்க்கத்துடன் வலம் வரும் ஒற்றைக் குரங்கு பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. உணவிற்காக அங்கும், இங்கும் சுற்றி தெரியும் இந்த குரங்கின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் இந்த குரங்கானது கட்டிபோடப்பட்டிருக்கும் நாய்களை கடித்து குதறி பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்குகினை கண்டதும் குறைக்கும் நாய்களை இந்த சீறும் குரங்கானது கடித்து ரத்தம் வரும் வரையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விடுகிறது.
சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் ஒற்றை குரங்கு விரட்டுவதால் பயத்தில் ஓடும் குழந்தைகள் தவிறி கீழே விழுந்து காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், பெற்றோர்கள் குழந்தைகளை தனியாக வெளியே விடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடுகள் திறந்திருக்கும் பட்சத்தில் வீடுகளுக்குள் சென்று உணவிற்காக பாத்திரங்களை உருட்டும் செயலிலும் குரங்குகள் ஈடுபட்டு வருவதால் பெண்கள் பெரிதும் பயத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால், எப்போதும் வீட்டை பூட்டியே வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்த நிலையில் குரங்குகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்த வனத்துறையினர் குரங்கினை பிடிக்க முடியாத நிலையில் கூண்டினை திரும்ப எடுத்துச் சென்று விட்டனர். இதனால், ஒற்றை குரங்கின் அட்டகாசம் தொடருவதால் பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெறிபிடித்து சுற்றி வரும் இந்த ஒற்றைக் குரங்கினை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.