கோல்கட்டா,?:”மேற்கு வங்கத்தில் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.,வினருக்கு, எங்களால் 10 நிமிடங்களில் பாடம் புகட்டியிருக்க முடியும்,” என, திரிணமுல் காங்., மூத்த தலைவர் மதன் மித்ரா பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ., சார்பில் சமீபத்தில், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்பட்டது. திரிணமுல் காங்., அரசின் ஊழல் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக, பா.ஜ.,வினர் தெரிவித்திருந்தனர்.
கோல்கட்டா, ஹவுரா ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பா.ஜ.,வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் ஏராளமான பா.ஜ.,வினர் காயம் அடைந்தனர். பதிலுக்கு பா.ஜ.,வினர் நடத்திய தாக்குதலிலும், கல்வீச்சிலும் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுதும் திரிணமுல் – பா.ஜ., கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திரிணமுல் காங்., மூத்த தலைவரான மதன் மித்ரா கூறியதாவது:கட்சி மேலிடத்திடமிருந்து எங்களுக்கு உத்தரவு வந்திருந்தால், அடுத்த 10 நிமிடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை சிதைத்திருப்போம். அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியிருப்போம். அவர்கள் 8 அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்ந்திருப்போம். ஆனால், திரிணமுல் கட்சிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
க
ண்டனம்
அவரது பேச்சுக்கு பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டிருப்பதால், மேற்கு வங்க அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். திரிணமுல் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம்கூறுகையில், ‘போலீசார் மீது தாக்குதல் நடந்த இடத்தில் நான் இருந்திருந்தால், தாக்குதல் நடத்தியவர்களின் நெற்றியிலேயே சுட்டிருப்பேன்’ என்றார். இவரைத் தொடர்ந்து, அந்த கட்சியின் மூத்த தலைவரான மதன் மித்ராவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது, பா.ஜ.,வினரிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement