ஆலப்புழா: இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை 12வது நாளாக மேற்கொண்டு வரும் ராகுல்காந்திக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப்பயணத்தை ராகுல் காந்தி, கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். அவர் தமிழ்நாட்டில் நடைப்பயணத்தை முடித்துக்கொண்டு கேரளாவில் பயணத்தை தொடர்ந்து வருகிறார். 12வது நாளாக நடைபயணம் செய்து வரும் அவர், ஆலப்புழா மாவட்டம் புன்னப்பராவில் தனது பயணத்தை மேற்கொண்டார்.
செல்லும் இடமெல்லாம் ராகுல்காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஆர்வத்துடன் கூடி ராகுலை உற்சாகப்படுத்தி வருகின்றனர். ராகுலும் கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். ராகுல் காந்தியுடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் செல்கின்றனர். கேரளாவில் நடைப்பயணத்தை முடித்தபிறகு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், டெல்லி வழியே அவர் காஷ்மீர் சென்று இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்.