1947-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்த கடைசி சீட்டா சிறுத்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் சீட்டா சிறுத்தை இனமே இல்லாமல் போனது. இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவுக்குச் சிறுத்தைகளை அழைத்துவர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, இந்தியாவிலிருந்து சென்ற சிறப்பு விமானம் மூலம் எட்டு சீட்டா சிறுத்தைகள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டன. அந்த எட்டு சிறுத்தைகளையும் தனது பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி அன்று, மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி.
சிறுத்தைகளை விடுவித்த பின்னர், கேமரா மூலம் அவைகளைப் படமும் எடுத்தார் மோடி. அந்தப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி கேமராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்கார், “அனைத்து புள்ளிவிவரங்களையும் மூடி வைத்திருப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் கேமிராவிலும் லென்ஸ் கவரையும் மூடி வைத்திருப்பதுதான் தொலைநோக்கு பார்வை” என்று கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் மோடி கையிலிருந்த கேமராவின் லென்ஸ் கவர் மூடப்பட்டிருந்தன.
இதையடுத்து, ஜவஹர் சிர்கார் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது. காங்கிரஸ் கட்சியின் டாமன் டையூ பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது. திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் இதே புகைப்படத்தைப் பதிவிட்டனர். தொடர்ந்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர், மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட படத்தையும், ஜவஹர் சிர்கார் வெளியிட்ட படத்தையும் ஒப்பிட்டு, ஃபேக்ட் செக் செய்து, `இது போலியான படம். எடிட் செய்யப்பட்டிருக்கிறது’ என்று பதிவிடத் தொடங்கினர். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கேமரா வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படத்தில், லென்ஸ் கவர் மூடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ட்விட்டர் பக்கத்தில் தனது ட்வீட்டை டெலிட் செய்தார் ஜவஹர் சிர்கார்.
இந்த நிலையில், மேற்குவங்க பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரும், எம்.பி-யுமான சுகந்தா மஜூம்தார் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்ய சபா எம்.பி, நிக்கான் கேமராவுக்கு கேனான் லென்ஸ் வைத்து மூடப்பட்டிருக்கும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். இது மோசமான போலி பிரசாரம். மம்தா (மேற்குவங்க முதல்வர்) குறைந்தபட்ச பொது அறிவு கொண்டவர்களை பணியமர்த்த வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். நிக்கான் கேமராவுக்கு கேனான் கவர் வைத்து எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து எதிர்க்கட்சியினரை, குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர் பா.ஜ.க-வினர்.