ஆ.ராசா, பிடிஆர் பேச்சுகள் திமுகவின் காதுகளில் ஏன் விழுவதில்லை?

சென்னை பெரியார் திடலில், ‘60 ஆண்டுகால விடுதலை ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் விடுதலை சந்தா வழங்கும் விழா’ என்கிற தலைப்பில் திராவிடர் கழகத்தால் கூட்டம் ஒன்று கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய
திமுக
துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கிப் பேசினார்.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆ.ராசா மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்துக்களை விபசாரி மகன் என்று ஆ.ராசா கூறியதாக குற்றம் சாட்டும் அவர்கள், ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்; மனுஸ்மிருதி சொல்லப்பட்ட கருத்துக்களைத்தான் சொன்னேன் என்று தெரிவித்துள்ளதோடு, “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து மத வேதங்கள் மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து வைத்து பிரம்மனின் காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், அழுக்கில் பிறந்தவன் பஞ்சமன் என்றும் கூறி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை இழிவுபடுத்துகிறது. குறிப்பிட்ட சமூக மக்களை ஒடுக்கும் இந்து மத வேதத்திற்கு எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகவே இருந்து வந்துள்ளது. அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல சித்தர்கள் முதல் வள்ளலார் வரை இதனை பேசியுள்ளனர். அதுபோலவே, திராவிட கருத்துக்களை ஆழமாகவும், சாதிய எதிர்ப்பை வலுவாகவும் பேசும் ஆ.ராசாவும் இதனை அம்பலப்படுத்தியுள்ள போது, அவர் எப்படி இந்துக்களுக்கு எதிரானவர் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆ.ராசாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்கும்போது, ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் யாரும் பகிரங்கமாக பேசியதாக தெரியவில்லை. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி காட்டமான அறிக்கை ஒன்றை ஆ.ராசாவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் ஆ.ராசாவுக்கு கொடுத்த ஆதரவைக் கூட திமுக தந்ததாக தெரியவில்லை.

மறுபக்கம் இந்து முன்னணியினர் இன்று நீலகிரி மாவட்டத்தில் நடத்திய கடையடைப்பு கிட்டத்தட்ட வெற்றி என்ற நிலையில் கொண்டாடி வருகின்றனர். காரணம், பல பகுதிகளில் இந்து முன்னணியினர் திரண்டு போய் மிரட்டி கடைகளை மூட வைத்துள்ளனர். இதைத் தடுக்க திமுக தரப்பு தீவிரமாக முயற்சி செய்யவில்லை. முதல்வர்
ஸ்டாலின்
கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் தீவிரமாக செயல்பட்டது போலத் தெரியவில்லை.

இதேபோல மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரத்திலும் கூட திமுக தரப்பு மென்மையான போக்கைத்தான் கையாண்டது. ஆ.ராசா போன்றே பிடிஆரும் திராவிட அரசியலை வலுவாக பொட்டில் அடித்தாற்போல் பேசும் பழக்கம் கொண்டவர்.

மாநில சுயாட்சி, மொழி உரிமைகள், வரி வசூல் போன்றவற்றில் இந்திய ஒன்றியத்தின் ஏதேச்சதிகார போக்கை பேரறிஞர் அண்ணாவின் பாராளுமன்ற உரையில் இருந்தும், மொழி உரிமைகளுக்கான தமிழ் நாட்டின் போராட்டம் சுதந்திர இந்தியாவிற்கு முன்பே இருந்து வருவதையும் பேசும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவை கடுமையாக விமர்சித்து விட்டு, இறுதியாக ‘நான் கடவுள் நம்பிக்கையாளர்’ என்று கூறுகிறார். இது ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டும் விதமாக உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பாடம் எடுக்கும் விதமான பிடிஆரின் பேச்சுகள், தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அவற்றை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். அதனை செய்வதற்கான முக்கியப்பங்கு திமுகவுக்கு இருக்கும் நிலையில், இதுபோன்ற விவகாரங்களில் பாஜகவின் வேலைத்திட்டத்தை ஒப்பீட்டளவில் திமுக செய்யவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பல்வேறு விவாதங்களை எழுப்பும் பிடிஆரின் கேள்விகளை தமிழகத்தின் கடைக்கோடி மக்கள் எழுப்ப வேண்டும், அதுபற்றி அவர்கள் விவாதிக்க வேண்டும்; அவரது பேச்சு அரசியலாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும்போது, திமுகவோ மவுனம் சாதிக்கிறது.

அதேபோல், அரசு விழாவில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சடங்குகள் எதற்கு என கேள்வி எழுப்பியவரும், ‘இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல’ என கலைஞர் சொன்னதை சுட்டிக்காட்டி, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்த அறநிலையத்துறைக்கு கண்டனம் தெரிவித்தவருமான தருமபுரி எம்.பி., செந்தில்குமார் மீது திமுக தலைமை வருத்தம் தெரிவித்ததாக வரும் தகவல்களும் வருத்தம் அளிக்கின்றன.

ஆ,ராசாவின் பேச்சு பற்றிய கேள்வி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் எழுப்பப்பட்ட போது, தனது காதுகளில் அந்த கேள்வி விழவில்லை என்பது போன்று செய்கை செய்தார். இது, ஆ.ராசா, பிடிஆர் போன்றோர் பேசும் திராவிட அரசியலும், சாதிய எதிர்ப்பு அரசியலும் திமுகவின் காதுகளில் விழவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது. திமுக தலைவராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி, முதல்வராக இருக்கும்போதே இதுபோன்று பகிரங்கமாக பேசும் பழக்கம் கொண்டவர். ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்? சித்திரை, வைகாசி போன்ற மாதங்கள் நாரதரும், கிருஷ்ணரும் கலவி கொண்டு பிறந்த பிள்ளைகள் என போகிற போக்கில் அடித்து விட்டு செல்வார் கலைஞர் கருணாநிதி.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதும் தனது ட்விட்டர் பக்கத்தில் Dravidian stock என பதிவிட்டார். இது திராவிட மாடல் அரசு என ஒவ்வொரு மேடைகளிலும் அவர் முழங்கி வருகிறார். அண்மையில் கூட பெரியார் பிறந்தநாளன்று பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்டாலின், ‘பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.’ என்றார். அதே பெரியார் திடலில்தான் மனுஸ்மிருதியில் இந்துக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை பெரியார் பாணியில் ஆவேசமாக பேசினார் ஆ.ராசா. ஆனால், அவருக்கான ஆதரவுக் கரத்தை நீட்டாமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது, ஆ.ராசா, பிடிஆர் போன்றோரை திமுக கை விட்டு விட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

திமுகவின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கியபோது, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார் அண்ணா. பெரியார் பேசும் தடாலடியான கருத்துக்கள் அமைப்புகளுக்கு சரிவரும் என்றாலும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு அவை சரிவராது என்று கருதிய காரணத்தால் பேரறிஞர் அண்னா இவ்வாறு கூறினார். ஆனால், பெரியாரின் சமூக நீதி கருத்துக்களை சட்டவடிவமாக்கினார் அண்ணா. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக கடைசி வரை போராடினார் சமத்துவபுரம் கண்ட கலைஞர். அவர்கள் வழியில் வந்த Dravidian stock முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் அதே வழியில் பயணிக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.