போபால்: ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளுக்கு (சீட்டா) மான்களை தயவு செய்து இரையாக கொடுக்காதீர்கள் என்று ராஜஸ்தானின் பெருமளவு வசிக்கும் பிஷ்னோய் சமூக அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் கடந்த 1952-ம் ஆண்டில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தை இனமாக சிவிங்கிப் புலிகள் அறிவிக்கப்பட்டன. அன்று முதல் இப்போது வரை இந்தியக் காடுகளில் சிவிங்கிப் புலிகளே இல்லாமல் இருந்தது.
இந்தக் குறையை போக்கும் வகையிலும், இந்தியக் காடுகளின் சமநிலையை பாதுகாக்கும் நோக்கிலும் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப் புலிகள் மத்திய பிரதேசத்துக்கு கடந்த 17-ம் தேதி கொண்டு வரப்பட்டன.
பெரும் வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினமான அன்று, அவரை நேரடியாக மத்திய பிரதேசத்துக்கு வந்து குனோ தேசியப் பூங்காவில் சிவிங்கிப் புலிகளை விடுவித்தார். 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அறிமுகம் செய்யப்பட்டதை நாடே கொண்டாடியது. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சூழலியல் ஆர்வலர்களும் வெகுவாக வரவேற்றனர்.
சிவிங்கி புலிகளுக்கு மறுவாழ்வு – மோடி
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த நூற்றாண்டுகளில் இயற்கையை அழிப்பது அதிகாரத்தின், நவீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. 1947-ல், நாட்டில் கடைசியாக இருந்த மூன்று சிவிங்கிப் புலிகள் இரக்கமின்றி, பொறுப்பற்ற தன்மையுடன் சால் வனப்பகுதிகளில் வேட்டையாடப்பட்டன.
1952 ல் இந்தியாவிலிருந்து சிவிங்கிப் புலிகள் அழிந்து போன போதிலும், கடந்த 70 ஆண்டுகளாக அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆனால், இப்போது சுதந்திரத்தின் புதிய உத்வேகத்துடன் நாடு சிவிங்கி புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியுள்ளது” என்றார்.
மான்கள் இரை
இதனிடையே, இந்த சிவிங்கி புலிகளுக்கு தேவையான உணவை உறுதி செய்ய மத்திய பிரதேச அரசும், குனோ தேசிய பூங்கா நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சிவிங்கி புலிகள் வேட்டையாடி உண்பதற்காக அங்கு அதிக அளவில் மான்களை விட முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மான்கள் பிடித்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
“மான்கள் வேண்டாமே…”
இந்நிலையில், இதற்கு பிஷ்னோய் சமூக அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீபத்தில் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப் புலிகளுக்கு உணவாக மான்கள் விடப்படுகின்றன என செய்திகள் வெளியாகின. இது உண்மையாக இருக்கும்பட்டத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். அழிவு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து அனைத்து வகையான உயிரினங்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுத்து வரும் சூழல், இந்த தகவல் பெரும் மனவேதனையை தருவதாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் மான்கள் அழியக்கூடிய நிலையில் இருக்கும்போது அவற்றை சிவிங்கி புலிகளுக்கு இரையாக அனுப்புவது எப்படி நியாயமாகும்? என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.