இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 19 புதிய முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகை வாகனங்கள் சுமார் 15 ஆயிரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 93 முச்சக்கர வண்டிகளும், 2020 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 150 முச்சக்கர வண்டிகளும், 2019 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 490 முச்சக்கர வண்டிகளும், 2018 ஆம் ஆண்டில் 20 ஆயிரத்து 63 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளின்படி , 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை புதிதாக பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை விட அதிகமாக காணப்பட்டதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2011ஆம் ஆண்டு 1 இலட்சத்து 38 ஆயிரத்து 426 புதிய முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை ஆகும். இதற்கு அடுத்தபடியாக, 2015ஆம் ஆண்டு 1 இலட்சத்து 29 ஆயிரத்து 547 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது 11 இலட்சத்து 84 ஆயிரத்து 339 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளும், 48 இலட்சத்து 33 ஆயிரத்து 928 பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் காணப்படுவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் 6 ஆயிரத்து 209 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 964 கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.