`இன்னும் எத்தனை பலிகளோ..?’- சைரஸ் மிஸ்திரி விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடரும் உயிரிழப்புகள்

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்த விபத்து குறித்து நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். சைரஸ் மிஸ்திரி இறப்புக்குப்பின், அந்த விபத்து நடந்த இடம் குறித்து பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் வெளிவந்த ஒரு தகவலின்படி, 2022-ல் மட்டும் சைரச் மிஸ்திரி வாகனம் விபத்துக்குள்ளான இடத்தில் அதேபோல பல நூறு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாம்.
மும்பை – அகமதாபாத் இடையேயான நெடுஞ்சாலையில் தானே மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே உள்ளது அந்த விபத்துப் பகுதி. அப்பகுதியில் உள்ள பல இடங்களில் விபத்து நடப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அப்படி மொத்தமாக அப்பகுதியில் 2022-ல் மட்டும் 262 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாம். இதில் மொத்தம் 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சுமார் 192 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
image
நிகழும் விபத்துகளில் பெரும்பாலான அதிவேகம் காரணமாகவும், ஓட்டுநரின் தவறான அனுகுமுறையாலும்தான் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் அதிகாரிகள் தரப்பில் `சாலைகளை சரியாக பராமரிக்காதது, சாலைகளில் குறியீடுகள் சரியாக வைக்காதது, வேகத்தடைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது ஆகியவையே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமென சொல்லப்படுகிறது. மிஸ்திரி மரணத்தின்போது, 7 பேர் கொண்ட தடயவியல் குழுவினர் மரணத்துக்கு காரணம் குறிப்பிட்ட அந்த பாலத்தின் அமைப்பு சரியாக இல்லாததுதான் என்று கூறியிருந்தது இங்கே நினைவுகூறத்தக்கது.
சைரஸ் மிஸ்திரி கார் விபத்துக்குள்ளான இடத்தில் இவ்வருடத்தில் சுமார் 25 மோசமான விபத்துகளும், 26 மரணங்களும் நிகழ்ந்துள்ளன என மகாராஷ்ட்ரா நெடுஞ்சாலை காவல்துறை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பாலம், சூர்யா ஆற்றின் பாலமாகும். இங்கு, ஒருவர் மும்பை நோக்கி பயணித்தால், பாலத்திற்கு முன் மூன்று வழியாக பாதை பிரிந்து, இருவழிப்பாதையாக சுருங்குகிறது என சொல்லப்படுகிறது. இதனாலேயே அப்பகுதியில் விபத்து அதிகம் நிகழ்வதாக தெரிகிறது.
image
இந்த நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகின்றது என்றாலும்கூட இதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் அருகிலிருக்கும் தனியார் சுங்க வரி நிர்வாகத்தினரையே சேரும் என்றும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான குழப்பங்களும் நிலவிவருகிறது. இதனாலேயே பராமரிப்பில் பின்தங்கிய நிலை நீடிக்கிறது.
இருப்பினும் சைரஸ் மிஸ்திரி மறைவுக்குப் பின், மகாராஷ்ட்ரா காவல்துறை மத்திய சாலை பாதுகாப்புக்கு, சாலைகள் நிலவரம் குறித்து பரிசோதனை செய்ய பரிந்துரை செய்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.