இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம் – இந்தியா உறுதி

கொழும்பு,

இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கிறது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை அளித்துள்ளது. இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும்.

ஆனால், இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை மக்கள் சந்தித்து வரும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக, இலங்கைக்கு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 400 கோடி டாலர் இருதரப்பு உதவியை இந்தியா அளித்துள்ளது. இதர நட்பு நாடுகளிடமும் இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வற்புறுத்தி உள்ளது.

கல்வி உதவித்தொகை

இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் முக்கிய பொருளாதார திட்டங்களில் நீண்ட கால முதலீடுகளை செய்துள்ளது.

அத்துடன், இலங்கையில் 350 கோடி டாலர் மதிப்புள்ள இருதரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டங்கள் நடந்து வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சி மேற்கொள்ள கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.

இத்தகைய ஒத்துழைப்புகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவி வருகின்றன.

இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.