ரஷ்யா போர்க்குற்றங்கள்செய்யவில்லை என மறுத்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால், மீட்கப்பட்ட இலங்கையர்கள் சிலர் சொல்லும் விடயங்கள், ரஷ்யா சொல்வது பொய் என நிரூபித்துள்ளன.
ரஷ்யப்படைகளிடம் இழந்த இடங்களை மீண்டும் உக்ரைன் கைப்பற்றி வரும் நிலையில், ரஷ்யப்படையினர் செய்த அட்டூழியங்கள் குறித்த விடயங்கள் வெளியாகி வருகின்றன.
அவற்றில், ரஷ்யப்படையினரிடம் பல மாதங்கள் சிக்கித் தவித்த இலங்கையர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை இங்கு விவரிக்கிறார்கள்.
நாங்கள் உயிருடன் திரும்பப்போவதில்லை என்றே எண்ணிக்கொண்டிருந்தோம் என்கிறார் Dilujan Paththinajakan.
image – bbc
கடந்த மே மாதத்தில் ரஷ்யப் படையினரிடம் சிக்கிய ஏழு இலங்கையர்களில் ஒருவர் Dilujan.
Kupiansk என்ற இடத்தில் வாழ்ந்துவந்த இந்த ஏழு பேரும், சற்றே பாதுகாப்பான Kharkivஐ நோக்கி புறப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், முதல் செக்போஸ்டிலேயே ரஷ்யப் படையினரிடம் சிக்கியிருக்கிறார்கள் அவர்கள் அனைவரும். பிடிபட்ட இலங்கையர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, ரஷ்ய எல்லையிலமைந்துள்ள Vovchansk என்ற நகரிலுள்ள தொழிற்சாலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் ரஷ்யர்கள்.
அங்குதான் நான்கு மாத சித்திரவதைக்காலம் துவங்கியிருக்கிறது.
மிகக்குறைவான உணவு, ஒரு நாளுக்கு ஒரு முறைதான், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே கழிவறையைப் பயன்படுத்த அனுமதி, எப்போதாவது குளியல், அதுவும் இரண்டு நிமிடங்களுக்குதான்.
image – bbc
ஆண்கள் அனைவரும் ஒரு அறையிலும், அந்தக் குழுவில் ஒரே பெண்ணான மேரி (Mary Edit Uthajkumar, 50) தனியாக ஒரு அறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எங்களை ஒரு அறையில் வைத்துப் பூட்டியிருந்தார்கள் அவர்கள் என்று கூறும் மேரி, நாங்கள் குளிக்கப்போனால் எங்களை அடிப்பார்கள், மற்றவர்களை சந்திக்க எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை, மூன்று மாதங்கள் அடைபட்டிருந்தோம் என்கிறார்.
ஆண்களைப் பொருத்தவரை அவர்கள் எப்படி சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பது அவர்களைப் பார்த்தாலே அப்பட்டமாக தெரிகிறது. அவர்களில் சிலருடைய நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளன.
குடித்துவிட்டு கண்மூடித்தனமாக அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள் அந்த ரஷ்யர்கள். துப்பாக்கியின் மட்டையால் என் உடலின் பல பகுதிகளில் அவர்கள் என்னை அடித்தார்கள் என்கிறார் தினேஷ் (Thinesh Gogenthiran,35). ஒரு முறை என்னை பயங்கரமாக வயிற்றில் குத்திய ஒரு ரஷ்யப்படைவீரர், என்னிடம் பணம் கேட்டார் என்கிறார் அவர்.
எங்களுக்கு பயங்கர கோபம், கூடவே வருத்தம், தினமும் அழுதோம் என்கிறார் Dilukshan Robertclive (25).
image – bbc
எங்களை உயிருடன் வைத்திருந்தது இரண்டு விடயங்கள்தான் என்று கூறும் அவர், அவை பிரார்த்தனையும், எங்கள் குடும்பங்களைக் குறித்த நினைவுகளும்தான் என்கிறார்.
Izyum என்ற இடத்தை உக்ரைன் இராணுவம் மீட்டதைத் தொடர்ந்து அந்த இலங்கையர்கள் ஏழு பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது.
மீண்டும் Kharkiv நோக்கி அவர்கள் நடக்கத்துவங்கியபோது அவர்களைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பொலிசாரில் ஒருவர் தனது மொபைல் போனைக் கொடுத்து உதவ, அவர்கள் தங்கள் குடும்பங்களை தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
தன் மனைவியையும் மகளையும் மொபைலில் வீடியோ கால் மூலம் கண்டபோது, Ainkaranathan Ganesamoorthi (40)ஆல் தனது கண்ணீரை அடக்க முடியவில்லை, சத்தமிட்டுக் கதறிவிட்டார் அவர். ஒருவர் பின் ஒருவராக தங்கள் குடும்பங்களுடன் கண்ணீர் மல்கப் பேச, மொபைல் கொடுத்த தன்னைக் கட்டியணைத்துகொண்ட அந்த இலங்கையர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார் அந்த பொலிஸ் அதிகாரி.
தற்போது Kharkivக்கு கொண்டு செல்லப்பட்ட ஏழு பேருக்கும் மருத்துவ உதவிகளும், புதிய உடைகளும் வழங்கப்பட, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக தூங்குகிறார்கள் அவர்கள்.