ஓபிஎஸ் ஆதரவாளர்கள் படங்களை பேனரில் போட்டு வம்பிழுக்க முயற்சி- இபிஎஸ் தரப்பினர் மீது புகார்

போடியில் ப்ளக்ஸ் பேனரில் படம் போட்டது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உண்டாகும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமை பதவிக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என தனித்தனியாக பிரிந்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
image
இதையடுத்து மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதி முழுவதும் இபிஎஸ் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான பாப்புல் ஜக்கையன், அம்மையன், புலி முருகன், செல்வம், கணேசன், ராமர் ஆகியோர்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி இபிஎஸ் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனரில் போட்டு இபிஎஸ் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக போடி டிஎஸ்பி சுரேஷிடம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி செயலாளர் பன்னீர் தலைமையிலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது ஆதரவாளர்கள் 6 பேரின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி இபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுக்கூட்ட பேனரில் ஒட்டி கிராமம் முழுவதும் வைத்துள்ளனர்.
image
ஓபிஎஸ் ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பினர் தங்களது பக்கம் இழுக்கும் நோக்கத்தோடு பிளக்ஸ் பேனர்களில் அவர்கள் அனுமதியின்றி ஒட்டியுள்ளனர். எனவே இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.