காங். தலைவர் தேர்தல்: அசோக் கெலாட் போட்டியிட தயங்குவது ஏன்?

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சித் தலைவராக பதவியேற்கும்படி பல முறை வலியுறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை.

இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கும் வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு, உறுதியான, தெளிவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரை போட்டியிட வைக்க, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். எனினும் ராகுல் காந்தி அசைந்தபாடில்லை.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட, மூத்தத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான சசி தரூர் முடிவு செய்துள்ளார். இதற்கு சோனியா காந்தியும் ஓகே சொல்லி உள்ளார். இதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடாத பட்சத்தில், காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை களமிறக்கவும் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அசோக் கெலாட்டை சோனியா காந்தி பல முறை வலியுறுத்தியதாகவும் அதை அசோக் கெலாட் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். வரும் திங்கட்கிழமை இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, எப்படியாவது ராகுல் காந்தியை மனமாற்றம் செய்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலில், போட்டியிட வைக்கவும், அசோக் கெலாட் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிட தயங்குவதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன. அதாவது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவி போய்விடும். அந்தப் பதவிக்கு தனக்கு விசுவாசமான ஒருவரை நிறுத்த அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இல்லையெனில், தனக்கு போட்டியாக உள்ள சச்சின் பைலட், அந்த இடத்தை பிடித்து விடக் கூடும் என, அசோக் கெலாட் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அசோக் கெலாட் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இது ஒரும் புறமிருக்க, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சச்சின் பைலட்டை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.