காரில் யாத்திரை என்றால் பங்கேற்க மாட்டேன் என மறுத்தேன்! ராகுல் காந்தி

கொல்லம்: காரில் யாத்திரை என்றால் பங்கேற்க மாட்டேன் என மறுத்தேன் என பாரத் ஜோடோ யாத்ரா மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று 13வது நாளாக தொடர்கிறது.  கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை ராகுல் காந்தி ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் இருந்து தொடங்கினார். முன்னதாக தான் தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த பின்பு, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்பு ராகுல் காந்தி தொண்டர்களுடன் பாதயாத்திரை மேற்கொண்டார்.

இன்றைய பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதி களில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். பாத யாத்திரை குழுவினர் இன்று இரவு எர்ணாகுளம் அருகே கொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் தங்குகிறார்கள்.

முன்னதாக நேற்று ஆலப்புழா வடக்கால் கரையில் உள்ள மீனவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது கேரளாவில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல், குறைக்கப்பட்ட மானியம், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

தனது யாத்திரை குறித்து பேசிய ராகுல்காந்தி, நாடு முழுவதையும் தனது கைக்குள் கட்டுப்படுத்த பாஜக விரும்புவதாக விமர்சித்தவர்,  “ஒரு கையளவு” மக்கள் “கட்டுப் படுத்தும்” ஒரு நாட்டை உருவாக்க பாஜக தலைமை  விரும்புவதாக காட்டமாக விமர்சித்தார். மேலும், தனது குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முதலில் வாகனம் மூலம் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், காரில் செல்ல முடியாத மக்கள் நமது நாட்டில் இருப்பதால், நடைபயணம் மூலமே மக்களை சந்திக்க முடியும் என்பதால், நடைபயண யாத்திரை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.