கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் கடந்த 9-ம் தேதி முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அரசன்குளம், புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களைத் திரட்டி குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பாண்டி தலைமையில், தொகுதி செயலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று போராட்டம் நடத்த குவாரி பகுதிக்கு வந்தபோது, போலீஸார் அவர்களிடம் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க, அப்பகுதி கிராமங்களில் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 வீதம் விநியோகிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.