பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக, அவர் குறித்த செய்திகளே உலகம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. அவர் குறித்த செய்திகள் வெளியான அதே சமயம், பிரிட்டனில் உள்ள பிற நாடுகளின் விலை மதிப்பில்லா கலைப்பொருட்களை திரும்பத் தர வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன.
கோஹினூர் வைரம்
ராணி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கிரீடத்தில் உள்ள கோஹினூர் வைரத்தைத் திருப்பித் தர வேண்டுமென இந்தியா முழுவதிலும் இருந்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். கோஹினூர் என்றால் ”ஒளியின் சிகரம்” எனப் பொருள். கோஹினூர் வைரத்தின் தோற்றம் குறித்து துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், அது 13-ம் நூற்றாண்டில், தற்போதைய தெலங்கானா மாநிலம் கோல்கொண்டாவில் உள்ள வைரச் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாபைக் கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியபோது 10 வயதே ஆன ராஜா துலீப் சிங் கோஹினூர் வைரத்தை ஒப்படைத்ததாக, அரண்மனை வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரம் ஆண்களுக்கு துரதிருஷ்டமானது என வதந்தி பரவியதை அடுத்து, அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் அணியத் தொடங்கினர்.
முதலில் ராணி விக்டோரியா அணிந்திருந்த கோஹினூர் வைரம், பின்னர் ராணி அலெக்சாண்டா மற்றும் ராணி மேரி ஆகியோரின் கிரீடத்தில் இடம் பெற்றது. தற்போது ராணி 2-ம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம், அவரது தாய் முதலாம் எலிசபெத்திற்காக செய்யப்பட்டதாகும். இப்போது அந்த கிரீடத்தை மன்னர் சார்லஸின் மனைவி கமிலா அணியவுள்ளார். கோஹினூர் வைரத்திற்கு உரிமை கோரி இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.
தென்னாப்பிரிக்க வைரம்
இந்தியாவைப் போன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரிட்டன் கொண்டு செல்லப்பட்ட வைரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன. ”ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வைரம், தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் மாகாணத்தில் கடந்த 1905-ம் ஆண்டு தாமஸ் கல்லினன் என்பவருக்குச் சொந்தமான சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரத்திலேயே இதுதான் வெட்டப்படாத தரமான வைரம் ஆகும். பிரிட்டனின் இணையதளத் தகவலின்படி, இந்த வைரம் 1907-ம் ஆண்டு அப்போதைய மன்னர் ஏழாம் எட்வர்டிற்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இந்தத் தகவலை மறுத்து வருகின்றனர். ட்ரான்ஸ்வால் மாகாணத்தில் செயல்பட்ட வைரச் சுரங்கங்கள் அனைத்தும், ட்ரான்ஸ்வால் மாகாணம், தனியார் சுரங்க நிறுவனம் மற்றும் பிரிட்டன் அரசின் காலனித்துவ அமைப்பின் அங்கம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரம் தற்போது செங்கோலில் இடம் பெற்றுள்ளது. சுரண்டலின் அடையாளமாகக் கருதப்படும் இந்த வைரத்தை தென்னாப்பிரிக்க அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!
எல்ஜின் சிற்பங்கள்
கிரீஸ் நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட எல்ஜின் சிற்பங்கள் எனப்படும் பார்த்தினான் சிற்பங்களை திரும்பக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பார்த்தீனான் சிற்பங்கள் ஏதென்ஸில் உள்ள அதீனா கோயிலில் இருந்த சிற்பங்கள் ஆகும். வரலாற்று அறிக்கைகளின்படி, கடந்த 1803-ம் ஆண்டு பிரிட்டன் பிரபு எல்ஜின், கிரீஸின் சேதமடைந்த சுவர்களில் இருந்து பார்த்தீனான் சிற்பங்களை லண்டனுக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள தகவலின்படி, ஒட்டோமான் பேரரசின் பிரிட்டிஷ் தூதராக எல்ஜின் இருந்ததாகவும், அவர் அனுமதி பெற்றே பார்த்தீனான் சிற்பங்களை லண்டனுக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
இதன் காரணமாகவே இவற்றிற்கு எல்ஜின் சிற்பங்கள் என்ற பெயர் ஏற்பட்டது. 1925-ம் ஆண்டில் இருந்தே இந்த சிற்பங்களை கிரீஸிற்குக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நடிகர் ஜார்ஜ் குளூனி மற்றும் அவரது மனைவி அமல் ஆகியோர் எல்ஜின் சிற்பங்களை கிரீஸிற்குக் கொண்டு வரக்கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
ரொசெட்டா கல்வெட்டு
கோஹினூர் வைரத்தைத் திரும்பப் பெறுமாறு இந்தியர்கள் குரல் எழுப்புவது போல், பிரிட்டன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ரொசெட்டா கல்வெட்டை மீண்டும் கொண்டுவர வேண்டுமென எகிப்தியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பண்டைய எகிப்திய எழுத்துகளான பட எழுத்துகளை மொழிபெயர்க்க இந்தக் கல்வெட்டு பெரிதும் உதவியது. இந்தக் கல்வெட்டு 1799-ம் ஆண்டு, எகிப்தின் மெம்பிஸ் பகுதியில் ஒரு பிரெஞ்சு இராணுவ அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அலெக்ஸாண்ட்ரியா பகுதியில் பிரிட்டிஷ் படைகளால் கைப்பற்றப்பட்ட இந்தக் கல், 1802-ம் ஆண்டு பிரிட்டன் அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அப்போதிலிருந்தே இக்கல் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் தான் இருந்து வருகிறது. இடையில் 1917-ம் ஆண்டு முதலாம் உலகப்போரின்போது முக்கிய பொருட்களை குண்டு வெடிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டபோது, இந்தக் கல் ஒரே ஒரு முறை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ரொசெட்டா கல்வெட்டை மீண்டும் எகிப்திற்குக் கொண்டு வர வேண்டுமென எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
பெனின் வெண்கலச் சிற்பங்கள்
இதேபோல, 1897-ம் ஆண்டு பெனின் என்றழைக்கப்பட்ட தற்போதைய நைஜீரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான வெண்கலச் சிற்பங்கள் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ஆய்வாளர் ஜேம்ஸ் பிலிப்ஸ் என்பவர், பெனினின் ராஜா ஒபா என்பவரால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க பெனினில் உள்ள கலைப்பொருட்களைத் திருடிக் கொண்டு வர பிரிட்டன் பேரரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டதாகவும், அவ்வாறு திருடப்பட்ட கலைப்பொருட்களை ஐரோப்பா முழுவதும் ராணுவத்தினர் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இவற்றில் சில இன்றும் லண்டனில் உள்ள பிரிட்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. பண்டைய ஆப்பிரிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ள பெனின் சிற்பங்களை மீண்டும் நைஜீரியா கொண்டு வர வேண்டுமென அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவை அனைத்துமே பிரிட்டன் பிற நாடுகளை தனது காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்தபோது அங்கிருந்து கொண்டு சென்றது என்பது தெள்ளத் தெளிவாகிறது. காலனியாதிக்கத்திற்கு தற்போதைய பிரிட்டன் அரச குடும்பம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் அவர்களால் இழைக்கப்பட்ட தவறுகளை சரிசெய்வதும், பறிக்கப்பட்ட கலைப்பொருட்களைத் திரும்பத் தருவதும் அவர்களது தார்மீகக் கடமை என்று கூட கூறலாம். குறைந்த பட்சம் கலைப்பொருட்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம் கடந்த காலத்தில் செய்யப்பட்ட தவறுகளை ஈடுசெய்ய முடியும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
மேலும் படிக்க | கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் : குடியரசுத் தலைவரிடம் முறையீடு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ