கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் பெரும்பாலானவற்றில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மிகுதியான செயல்பாடுகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஒன்றிய அரசின் ஏஜென்சிகளின் செயல்களுக்கு பின்னால் பிரதமர் மோடி இருப்பதாக நான் நம்பவில்லை.
ஆனால் பாஜ தலைவர்களின் ஒரு பகுதியினர் தங்களது நலன்களுக்காக அவற்றை தவறாக பயன்படுத்துகின்றனர். தற்போதுள்ள ஒன்றிய அரசானது சர்வாதிகார போக்கில் செயல்படுகின்றது. இந்த தீர்மானமானது யாருக்கும் எதிரானது அல்ல. ஒன்றிய ஏஜென்சிகளின் செயல்பாடுகளுக்கு எதிரானதாகும்’’ என்றார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 189 பேர் வாக்களித்ததை அடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு எதிராக 69 வாக்குகள் கிடைத்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பாஜ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.