சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்குவதில் பாஜகவின் ‘புதிய சாதனை’: விசாரணை வளையத்தில் சிக்கிய 200 அரசியல் பிரபலங்கள் யார்?

புதுடெல்லி: சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சி தலைவர்களை சிக்கவைப்பதில் பாஜக அரசு சாதனை புரிந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் 200 அரசியல் பிரபலங்கள் புலனாய்வு அமைப்பின் ரெய்டில் சிக்கியுள்ளனர். எதிர்கட்சிகளை ஒடுக்கும் விதமாக அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), வருமான வரித்துறை, அமலாக்க இயக்குனரகம் ஆகியவற்றை ஆளுங்கட்சி ஏவி விடுவதாக குற்றச்சாட்டுகள் கூறுவது வழக்கம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, ‘காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்’ என்று பாஜக கூறியது. தற்போது ஆளும் பாஜக அரசு, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்க துறையை எதிர்கட்சிகள் மீது ஏவிவிடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த வகையில் எந்த ஆட்சிக் காலத்தில் அதிகளவில் எதிர்கட்சிகள் மீது ரெய்டுகள் நடந்தன என்பது குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் (2014 முதல் தற்போது வரை), ஒரு முதல்வர் மற்றும் 12 முன்னாள் முதல்வர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிபிஐ வளையத்திற்குள் சிக்கியுள்ளனர். கடந்த 18 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 200 முக்கிய அரசியல்வாதிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் (2004-2014) குறைந்தது 72 அரசியல் தலைவர்கள் சிபிஐயின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தனர். அவர்களில் 43 (60 சதவீதம்) பேர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அதே பாஜக அரசின் கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில், குறைந்தது 124 முக்கிய தலைவர்கள் சிபிஐ விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்; அவர்களில் 118 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்; அதாவது 95 சதவீதம் பேர் எதிர்கட்சியினர் ஆவர். பாஜக ஆட்சி காலத்தில், 12 முன்னாள் முதல்வர்கள், 10 அமைச்சர்கள், 34 எம்பிக்கள், 27 எம்எல்ஏக்கள் தவிர 10 முன்னாள் எம்எல்ஏக்கள், 6 முன்னாள் எம்பிக்கள் சிபிஐ வலையில் சிக்கினர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 4 முன்னாள் முதல்வர்கள், 2 அமைச்சர்கள், 13 எம்பிகள், 15 எம்எல்ஏக்கள், ஒரு முன்னாள் எம்எல்ஏ, 3 முன்னாள் எம்பிகள் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்தனர்.

இவ்வாறாக புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஆளுங்கட்சிக்கு தாவி விடுவது மட்டுமே தீர்வாக உள்ளது. இதுகுறித்து புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அவர்கள் மீதான கட்சி அடையாளங்கள் ெவளிப்படுத்தப்படுகின்றன. வழக்கு, சோதனை போன்றவை எல்லாம் தற்செயலான நிகழ்வுதானே தவிர, உள்நோக்கம் உடையது அல்ல’ என்று விளக்கம் அளித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.