புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவானது, கார்கில் – லே நெடுகிலிலும் வீரர்களை நிறுத்தி, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லையை பாதுகாக்கிறது. இத்துடன் சியாச்சின் மலைப் பகுதியை பாதுகாக்கிறது. இந்நிலையில் ராணுவத்தின் 14-வது படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் 19,061 அடி உயரத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிபிஎன்எல் (பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட்) சியாச்சினில் ராணுவத்துக்கு இணைய இணைப்பு கொடுத்துள்ளது. பாரத் நெட் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் இந்த நிறுவனமே பொறுப்பாகும்.
எல்லையில் கிழக்கு லடாக் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களில் ராணுவத்துக்கு சில தனியார் நிறுவனங்களும் இணைய இணைப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.