
சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கும் 'பொன்னியின் செல்வன்' குழு
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான புரமோஷன் குறைவாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குறைபட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் படக்குழுவினர் பல்வேறு ஊடகங்களை சந்தித்துப் பேசினர். அடுத்து தங்களது சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

முதலில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்களது சுற்றுப் பயணத்தை இக்குழு ஆரம்பிக்கிறது. தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள், சில வெளிநாட்டு நகரங்கள் ஆகியவற்றிற்கு செல்ல உள்ளார்களாம். முக்கிய நடிகர்கள் சிலர் அனைத்து இடங்களுக்கும், மற்ற நடிகர்கள் அந்தந்த ஊர்களுக்கு ஏற்பவும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

மும்பையில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. பலத்த போட்டிகளை சமாளிக்க இந்த சுற்றுப் பயணம் மிகவும் அவசியம்.