ஜோத்பூர்: அவுட் ஹவுஸில் தங்கியிருக்கும் தந்தை தனது வீட்டுக்குள் வந்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை வீதியில் இழுத்து வந்து அடித்து உதைத்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் கிஷன் குமார் (40). அங்கிருக்கும் பிரபல ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கிஷன் குமாருடன் அவரது தந்தை தாமோதர் பிரசாத்தும் (75) தங்கியுள்ளார்.
மத்திய அரசு துறையில் உயரதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற தாமோதர் பிரசாத்தின் மனைவி அண்மையில்தான் காலமானார். மனைவி இறந்ததால் அவருக்கு சரிவர உணவு வழங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேண்டா வெறுப்பாக…
ஒரே ஊரில் இருந்தபோதிலும், தனது தந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க மகன் கிஷன் குமாருக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. எங்கு தான் சென்று பார்த்தால் தன்னுடன் அவர் வந்துவிடுவாரோ என்ற பயத்தில் மருத்துவமனைக்கு கூட சென்று தனது தந்தையை கிஷன் குமார் பார்க்கவில்லை. பின்னர், உறவினர்கள் வற்புறுத்தியதன் பேரில் தந்தை தாமோதரை 6 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வேண்டா வெறுப்பாக அழைத்துச் சென்றார் கிஷன் குமார்.
அவுட் ஹவுஸில்…
ஆனால், அவரை வீட்டுக்குள் தங்க வைக்காமல் வெளிப்பகுதியில் இருந்த சிறிய அவுட் ஹவுஸில் கிஷன் குமார் தங்க வைத்தார். அவருக்கு தேவையான உணவுகள், சரியான நேரத்தில் அங்கேயே வந்துவிடும். எனவே அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என கிஷன் குமார் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆனால், பேரக்குழந்தைகளை பார்க்கும் ஆசையில் கிஷன் குமார் இல்லாத நேரத்தில் தாமோதர் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இது சில தினங்களுக்கு முன்பு கிஷன் குமாருக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, தனது தந்தையை அவர் கண்டித்திருக்கிறார்.
வீட்டுக்குள் வந்ததால் ஆத்திரம்
இந்நிலையில், நேற்று காலை இதேபோல் தாமோதர், தனது பேரப்பிள்ளைகளை காணும் ஆசையில் கிஷன் குமார் வீட்டுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதை கிஷன் குமார் மாலை வீடு திரும்பியதும், அவரது மனைவி கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த கிஷன் குமார், தனது தந்தை தாமோதரை அவுட் ஹவுசில் இருந்து வீதிக்கு இழுத்து வந்தார். பின்னர் அனைவரின் முன்னிலையிலும் தனது தந்தையை அங்கிருந்த கம்பை எடுத்து சரமாரியாக அடித்தார். இதில் வலி தாங்க முடியாமல் முதியவர் தாமோதர் கதறியுள்ளார். ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அவரை கிஷன் குமார் அடித்துள்ளார்.
போலீஸில் புகார் – கைது
இதனை பார்த்த அங்கிருந்த மக்கள், கிஷன் குமாரிடம் இருந்து தாமோதரை மீட்டனர். ஆனால், ஆத்திரம் அடங்காத கிஷன் குமார் அவர்களையும் அடிக்க பாய்ந்துள்ளார். பின்னர் அவர்கள் கிஷன் குமாரை மடக்கிப் பிடித்து வீட்டுக்குள் கொண்டு சென்றனர். பிறகு, இதுகுறித்து அவர்கள் போலீஸிலும் புகார் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், கிஷன் குமாரை கைது செய்தனர்.
பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய தந்தையை, மகன் அடித்து உதைத்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையை கிஷன் குமார் தாக்கும் சிசிடிவி காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.