சென்னை: பிரசித்தி பெற்ற குலசேகரபட்டிணம் தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1 முதல் 10ந்தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்தாற்போல் மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தசரா திருவிழாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழா கொடியேற்றம் வரும் 26ஆம் தேதி ( செப்டம்பர்) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் மற்றும் கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு தினமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கோவையில் இருந்து அக்டோபர் 5 வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தசரா பண்டிகை முடிந்து ஊர் திரும்பிட ஏதுவாக அக்டோபர் 6 முதல் 10 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், குலசேரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில். வரும் 01.10.2022 முதல் 04.10.2022 வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர். குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் குலசேரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருத்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக. 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் https://www.tnstc.in/home.html மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.