சென்னை: தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 50 மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 1 அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 1 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன.
இவற்றில் தற்போது பெரும்பாலான இடங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 16-ம் தேதி காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 493 பேரில், 454 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 47 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. இதைப்போன்று ஜூலை 16-ம் தேதி காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 657 பேர் மற்றும் கூடுதலாக லேசான காய்ச்சல் உள்ளவர்கள் என்று 807 பேருக்கு டெங்கு சோதனை செய்யப்பட்டது. இதில் 51 பேருக்கு மட்டுமே டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 16-ம் தேதி காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 1014 பேரில், 462 பேருக்கு டெங்கு சோதனை செய்யப்பட்டது. இதில் 53 பேருக்கு மட்டுமே டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இம்ம்மாதம் 16-ம் தேதி ஒரே நாளில் 1784 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 1691 பேருக்கு டெங்கு சோதனை செய்யப்பட்டது. இதில் 121 பேர் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகளில் தமிழகத்தில் இந்த செப்டம்பர் மாதம் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு இரு மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.