சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்துறை அமைச்சரை இன்று சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. போதைப் பொருள் காரணமாக மாணவர்கள் சீரழிந்து வருவது தொடர்பாக உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். போதைப் பொருளை தடுப்பதில் இந்த அரசு மெத்தனமாக உள்ளது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் கொலை, கொள்ளை, குற்றங்கள் அதிகரித்துள்ளது குறித்தும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தோம்.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. நியாயமான பணி நடைபெறவில்லை. இது குறித்தும் தெரிவித்துள்ளோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. அதிமுக விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.