திருமலை : திருப்பதி கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதி உலாவிற்கு யானை, குதிரை, காளைகள் தயாராகி வருகிறது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை பார்த்து யானைகள் மிரளாமல் இருக்க அவற்றை கட்டுப்படுத்த கேரள நிபுணர்கள் குழுவினர் வந்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இந்த 9 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 16 வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். வீதி உலாவில் யானைகள், குதிரைகள் மற்றும் காளைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கலியுகத்தின் மன்னனாக விளங்கும் மலையப்ப சுவாமி வீதி உலாவில் முதலில் யானை, குதிரை, காளைகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அணிவிகுத்து வரவுள்ளன. இந்த விலங்குகள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் உள்ள யானைகளில் மிகுவும் குறைந்த வயது கொண்ட 14 வயதான ஸ்ரீநிதியும், 45 வயதான மூத்த யானை லட்சுமியும் வீதி உலாவில் பங்கேற்க உள்ளது.
இதுகுறித்து யானைகளை பராமரித்து வரும் எஸ்.வி.கோசாலை இயக்குநர் ஹரநாத ரெட்டி கூறியதாவது: ஹார்மோன்கள் வெளியேறும் போது ஆண் யானைகளை கட்டுப்படுத்துவது கடினம். இதனால், ஆண் யானைகளை வீதி உலாவிற்கு பயன்படுத்துவது இல்லை. வீதி உலாவில் பங்கேற்கும் பெண் யானைகளுக்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை உணவளிக்கப்பட்டு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதில் மாட வீதிகளில் வாகன ஆராதனைகளின் போது சக்தி வாய்ந்த மின் விளக்குகள் மற்றும் கலைஞர்களின் வாத்தியங்களின் ஒலியில் இருந்து யானைகள் ஆவேசம் அடையாமல் இருக்க சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பே பலவிதங்களில் யானைகளை அடக்கி பிரமோற்சவத்திற்கு தயார் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கரும்பு மற்றும் புல் வழங்கப்பட உள்ளது. பிரமோற்சவ வீதி உலாவில் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. யானை பாகன்கள் கயிறுகள், அங்குசம் (முள் மரம்) மற்றும் சங்கிலிகளுடன் தொடர்ந்து விழிப்புடன் இருந்து யானைகளை கட்டுப்படுத்த உள்ளனர். கால்நடைகளுக்கு சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அவை ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டுமே ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகளுடன் விலங்கியல் நிபுணர்களும் உள்ளனர். எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் விலங்குகளை கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. மேலும், யானைகளை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வாகன சேவைகளில் பங்கேற்கும் விலங்குகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட உள்ளன. திருமலையில் உள்ள எஸ்.வி.கோசாலையில் கறவை மாடுகள், இளம் கன்றுகள், மேலுரக் காளைகள் என மொத்தம் 45 பசுக்கள் உள்ளன. கால்நடைத் தொழுவத்தை ஒட்டியுள்ள சுமார் 8 ஏக்கர் நிலம் சமன் செய்யப்பட்டு மாடுகள் நடமாடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. 100 மாடுகளை அடைக்க ஒரு கொட்டகை அமைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோயில் தோமாலை சேவை, அபிஷேகம், ஏகாந்த சேவை, நவநீத சேவை போன்றவற்றுக்கு இங்கிருந்து பால், தயிர், வெண்ணெய் போன்றவை எடுக்கப்படுகின்றன. அன்னதான வளாகத்திற்கு மோர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.