மதுரையில் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளியில் நடைபெறும் பருவத் தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 6-ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித் தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தது என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் 6-ம் வகுப்பிற்கான தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பாடப் புத்தகத்தின் (சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை பாடப்பிரிவு) 19-வது பக்கத்தில், பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை குறித்த பாடத்தில் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி எனவும், தாங்களாக இந்தக் கேள்வியை தேர்வு செய்யவில்லை எனவும், இருப்பினும் இதுபோன்ற தவறு இனிவரும் நாட்களில் நடைபெறாது எனவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM