சென்னை: தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யாரிடமும் நியாயமான எதிர்ப்பை தான் காணவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தாய் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படுவதை தேசிய கல்விக் கொள்கை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதை எளிதாக உணருவார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். தேசிய மொழிகளில் ஒன்றான தமிழும் தேசிய கல்விக் கொள்கையால் முக்கியத்துவம் பெறும்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யாரிடமும் நியாயமான எதிர்ப்பை நான் காணவில்லை. தற்போது சில நண்பர்கள் இதற்கு ஆதரவாக இல்லை. எனினும், அவர்களும் படிப்படியாக ஆதரவு தெரிவிப்பார்கள்.
தமிழ்நாடு சிறந்த கல்வி பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் எப்போதும் போல் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கும்.
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் வெளியானது குறித்து கேட்கிறீர்கள். அது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிகிறேன்” என்று அவர் கூறினார்.