காந்தி நகர், :”தேர்தல் வெற்றி என்ற நோக்கத்துடனே இல்லாமல், நகரங்களின் வளர்ச்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும்,” என, பா.ஜ., ஆளும் மாநக ராட்சி மேயர்கள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.பா.ஜ., ஆளும் மாநக ராட்சி மேயர்கள் கூட்டம், குஜராத்தின் காந்திநகரில் நடக்கிறது. இதில், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 118 மேயர்கள்மற்றும் துணை மேயர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:மக்கள் பிரதிநிதிகள் எப்போதும், எதையும், தேர்தல் வெற்றி என்ற இலக்கோடு செய்யக் கூடாது. அப்படி கையாண்டால், உங்களுடைய நகரம் வளர்ச்சி அடைய முடியாது.நல்ல பலன்சில நேரங்களில் ஓட்டு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை கைவிட்டு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். அதனால், உங்களுடைய நகரம் அழகு பெறும், வளர்ச்சியை காணும். இதன் மூலம் மக்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.கடந்த 2014ல் நாம் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, நாடெங்கும் 250 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் இருந்தது. தற்போது, 750 கி.மீ., துாரத்துக்கு அது விரிவடைந்துள்ளது. இதைத் தவிர, 1,000 கி.மீ., துாரத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன.நாடு முழுதும், 100 ‘ஸ்மார்ட் சிட்டி’ அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் வளர்ச்சிப் பணிகளை அதிகளவில் செயல்படுத்துகிறோம். அதே நேரத்தில் மக்களிடமும் அவர்களுடைய கருத்துகளை மேயர்கள் கேட்டறிய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.பெரிய நகரங்களில் பிரச்னைகளை களைவதற்காக, புதிதாக துணை செயற்கைக்கோள் நகரங்களை உருவாக்குவது குறித்து ஆராய வேண்டும். உங்களுடைய அனைத்து திட்டங்களும் எதிர்கால தேவைக்கானதாக இருக்க வேண்டும். இந்த திட்டங்களில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்யுங்கள்.
போட்டிநகரங்களை அழகுபடுத்துவதில், வார்டுகளுக்கு இடையே போட்டியை ஏற்படுத்த வேண்டும். அதுபோல தங்களுடைய நகரத்தின் பாரம்பரியம், வரலாறு குறித்து மக்களுக்கு தெரியும் வகையிலான நகர அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும்.மேயர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்துவதற்காக, தகவல்களை பரிமாறி கொள்வதற்காக, ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலை தள குழுவை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement