“ பள்ளிப்படிப்பில் இருந்தே எனக்கு IAS ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. கல்லூரியில் அதையே என் குறிக்கோளாக வைத்துக் கொண்டேன். இளங்கலை பட்டப்படிப்பை முடித்த உடனே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன். சென்னையில் சில பயிற்சி மையங்களில் சேர்ந்தேன். பயிற்சி பெற்றுக்கொண்டே கடந்த 2010-ம் ஆண்டில் TNPSC மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத தொடங்கினேன். 2012-ம் ஆண்டு என் இரண்டாவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று IRS பணியில் சேர்ந்தேன். 2013-ம் ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 45 ரேங்க் பெற்று ஐஏஎஸ் தேர்ச்சிப் பெற்றேன்.
IAS தேர்வுக்கு நம்மால் எளிதாக படித்து தயாராக முடியுமா என்ற தயக்கம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் ஒரு சிறு புள்ளியில் இருந்து தானே துவங்கிறது என்ற நம்பிக்கையை எனக்குள் வைத்துக்கொண்டு தேர்வுக்கு தயாரானேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகையில் முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே என்னால் தேர்ச்சி பெறமுடியவில்லை. அடுத்த முறைதான் என்னால் தேர்ச்சி பெற முடிந்தது. இதை பற்றி யோசிப்பதே சுமார் 3 ஆண்டு காலம் வரை என் முழு நேர வேலையாக இருந்ததும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
IAS தேர்வில் தேர்ச்சி பெற நேர்த்தியான உழைப்பு அவசியம். இத்தேர்வுக்கு தயாராவதே ஒரு புதிய அனுபவம்தான். தொடர் வாசிப்பு, படித்ததை கூர்ந்த பார்வையோடு கருத்துக்களாக உள்வாங்கும் திறன், தேர்வில் விடையெழுதும் பயிற்சி ஆகிய மூன்றும் தான் இந்த தேர்வின் முக்கிய புள்ளிகள். பொதுவாக போட்டித்தேர்வுகள் என்பது உங்களுடைய உழைப்பு , விடாமுயற்சி, பொறுமையை நிறைய சோதிக்கும். ஆரம்பத்தில் ஏற்படும் தோல்விகளால் சோர்வு அடைந்து விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றியடைய முடியும்” இத்தேர்வு குறித்தான தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் ஜெயசீலன் IAS.
IAS தேர்வுக்கு தயாராவது எப்படி, அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் , இடையே ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது எப்படி போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் வழிகாட்ட வரும் 25.09.2022, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர்.வி.ப.ஜெயசீலன் IAS கலந்துக்கொண்டு போட்டித் தேர்வுகள் குறித்து இன்னும் விரிவாக பேச இருக்கிறார்.
மற்றும் பல IAS, IPS அதிகாரிகள் கலந்துக்கொண்டு உரையாற்ற இருக்கும் பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யவும்..
இந்த பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள அனுமதி இலவசம்.