மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கி இழப்பு ஏற்படுத்தியதாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தொலைதூர கல்வி வாயிலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 – 18ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கேரள மாணவர்கள் நான்கு பேர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி அடைந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் தேர்வே எழுதாத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கி முறைகேடு நடந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
இந்த முறைகேடுகளால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முறைகேட்டுக்கு காரணமாக இருந்ததாக கேரளாவில் கல்வி மையங்கள் நடத்தி வரும் அப்துல்ஹதீஸ், ஏ.கே.சுரேஷ், ஜெயபிரகாசன் உள்ளிட்ட நால்வர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்துள்ளது. அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் ராஜராஜன், சத்தியமூர்த்தி, கார்த்திகை செல்வன், ராஜபாண்டி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.