பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் குடிபோதையில் இருந்ததால் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 11ம் தேதி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டார். மாநாடு முடிந்து 18ம் தேதி லுப்தான்சா விமானத்தில் மீண்டும் டெல்லிக்கு திரும்பி ஆம் ஆத்மி தேசிய கூட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் பகவந்த் சிங் அன்று லுப்தான்சா விமானத்தில் டெல்லி திரும்பவில்லை. ‘முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் திரும்புவது தாமதம் ஏற்பட்டுள்ளது’ எனக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெர்மனியிலிருந்து புறப்படும் போது முதல்வர் பகவந்த் சிங் அதிகமான குடிபோதையிலிருந்ததால், அவரை விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். இதனால் அங்கு வாக்குவாதங்கள் நிகழ்ந்ததால் தான், லுப்தான்சா விமானமும் 4 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது’’ என அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டினார். இதனை மறுத்த ஆம் ஆத்மி கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு பேச எதுவும் இல்லாமல் இதை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றது.
சுக்பீர் சிங் குற்றம் சாட்டிய அடுத்த சில மணி நேரங்களில் லுப்தான்சா விமான நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘’விமானம் மாற்றம் காரணமாக தான் முதலில் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து டெல்லிக்கு எங்கள் விமானம் புறப்பட்டது’’ எனத் தெரிவித்துள்ளது.
இந்த இதற்கு பதிலளித்த ஒருவர், ‘’ முதல்வர் பகவந்த் மான் குடிபோதையிலிருந்தாரா? என்று கேட்க , அதற்கு லுஃப்தான்சா விமான நிறுவனம் பாதுகாப்பு காரணங்களால் தனிப்பட்ட பயணிகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று பதிலளித்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM