வால்பாறை: வால்பாறையில் வேட்டை பயிற்சி அளிக்கப்படும் புலிக்கு, வேட்டை பல் உடைந்ததால் இரை உட்கொள்ள முடியாமல் தவித்தது. அதற்கு தமிழக மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்து அசத்தினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் எஸ்டேட். இங்குள்ள பஜார் பகுதியில் உடல் மெலிந்த 2 வயது ஆண் புலியை வனத்துறையினர் மீட்டனர். அதன்பின் வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனையின்படி புலி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குணமான பின்னர் புலியை வனப்பகுதியில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க பரம்பிக்குளம் அணை கரையோரம், பிரம்மாண்ட கூண்டு அமைக்கப்பட்டது. கடந்த ஜூன் 5ம் தேதி வேட்டை பயிற்சி அளிக்க பிரம்மாண்ட கூண்டில் விடப்பட்டது. வேட்டை பயிற்சியில் மேல்தாடை வேட்டை பல் ஒன்று உடைந்து விட்டதாக கூறப்பட்டது. எனவே அடிக்கடி புலி நோய்வாய்பட்டது. இந்நிலையில் உடைந்த பல்லில் ஏற்பட்டுள்ள தொற்றை அகற்ற உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. வண்டலூர் வன உயிரியல் பூங்கா டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உள்ளனர். புலி உடல் நலம் தேறி வருவதாக வனத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.