பாகிஸ்தான் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இங்கிலாந்து? முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

கராச்சி,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.

அந்த வகையில் 7 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இதனால் அந்த அணி இளம் வீரர்களுடன் களம் இறங்குகிறது. கேப்டன் ஜோஸ் பட்லர் பின்னங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் முதல் 5 ஆட்டங்களில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான மொயீன் அலி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

இது குறித்து மொயீன் அலி கூறுகையில், ‘ஜோஸ் பட்லர் காயத்துடன் தான் வந்து இருக்கிறார். உலக கோப்பை போட்டி எங்களுக்கு பெரியது என்பதால் அந்த போட்டி முழுவதும் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே பாகிஸ்தான் தொடரில் அவர் களம் இறங்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக முடிவு எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

இந்த தொடரில் கடைசி ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடுவதா? இல்லையா? என்பது குறித்து அவர் முடிவு செய்வார். வரலாற்று சிறப்புமிக்க இந்த பாகிஸ்தான் தொடரில் கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கிறது’ என்றார்.

அண்மையில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்ற பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் முத்திரை பதித்தார். ஆனால் கேப்டன் பாபர் அசாம் 6 ஆட்டங்களில் 68 ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார். இழந்த பார்மை மீட்டு உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ரன்வேட்டை நடத்தும் வேட்கையுடன் அவர் உள்ளார்.

சமீபத்திய தோல்வியால் எழுந்த கடுமையான விமர்சங்களுக்கு இந்த தொடர் மூலம் விடைகொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதே சமயம் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் சவாலை முறியடித்து வெற்றிக்கனியை பறிக்க போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் 21 சர்வதேச 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் இங்கிலாந்தும், 6-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.